வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயார்: பவானி நெடுஞ்சாலைத்துறையினர்
ஈரோடு மாவட்டம் பவானி உட்கோட்ட பகுதிகளில் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயார் நிலையில் இருப்பதாக நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.;
ஈரோடு மாவட்டம் பவானி உட்கோட்ட நெடுஞ்சாலைத்துறைக்கு உட்பட்ட பகுதிகளில் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ளும் வகையில் அனைத்து முன்னேற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளதாக நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பவானி நெடுஞ்சாலைத்துறை உட்கோட்டத்தில் 44 கி.மீ நீளமுள்ள மாநில நெடுஞ்சாலைகள், 117 கி.மீ. நீளமுள்ள மாவட்ட முக்கிய சாலைகள், 278 கி.மீ நீளமுள்ள இதர மாவட்ட சாலைகள், 69 கி.மீ நீளமுள்ள கரும்பு அபிவிருத்தி திட்ட சாலைகள் என 508 கி.மீ நீளமுள்ள சாலைகள் பராமரிக்கப்பட்டு வருகிறது.
இம்மாத இறுதியில், வடகிழக்குப் பருவமழை துவங்க உள்ள நிலையில், மழைநீர் தேங்காமல் எளிதாக வழிந்தோடும் வகையில் சாலைகளில் உள்ள அனைத்து பாலம் மற்றும் வடிகால் கழிவுநீர் வழித்தடத்தில் உள்ள அடைப்புகள் அகற்றப்பட்டு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
இதேபோல், சாலைகளில் உள்ள நொடிகள் மற்றும் பள்ளங்கள் சரி செய்யப்பட்டு, விபத்து நடைபெறும் இடங்களில் உள்ள வேகத்தடைகள் சாலை உபயோகிப்பான்களை எளிதில் அறிந்து வேகத்தைக் குறைக்கும் வகையில் வர்ணம் தீட்டப்பட்டன.
குறிப்பாக, அந்தியூர் பர்கூர் கொள்ளேகால் சாலையில், மழைக்காலத்தில் மழைநீர் மலைப்பகுதியிலிருந்து சாலைகளில் வழிந்தோடி சேதம் ஏற்படுத்துவதை தடுக்கும் வகையில், கான்கீரிட்டாலான வடிகாலிருந்து சிறுபாலத்திற்கு மழைநீர் செல்ல உரிய வழிவகை செய்யப்பட்டுள்ளது.
மேலும், திடீரென மண் சரியும் இடங்களில் ஆங்காங்கே மணல் மூட்டைகள் அடுக்கி உரிய தடுப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கான்கீரிட்டாலான தடுப்புச் சுவர் அமைக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த முன்னேச்சரிக்கை பணிகளை பவானி உட்கோட்ட நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் பார்வையிட்டு, பருவமழையை எதிர்கொள்ள தயார் நிலையில் இருப்பதுடன், மழைக்காலத்தில் சாலைகளில் ஏற்படும் பாதிப்புகளை உடனடியாக சரிசெய்ய அனைத்து சாலைப்பணியாளர்களும் தயார் நிலையில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.