சத்தியமங்கலம் அருகே மலைப்பகுதியில் தரையிறங்கிய ஹெலிகாப்டர்
சத்தியமங்கலம் அருகே பனி மூட்டம் காரணமாக கடம்பூர் மலைப்பாதையில் தரையிறங்கிய ஹெலிகாப்டரால் பெரும் பரபரப்பு.
கேரளா மாநிலத்தை சேர்ந்த தனியாருக்கு சொந்தமான ஹெலிகாப்டர் பெங்களூரில் இருந்து மருத்துவ சிகிச்சைக்காக கேரளா நோக்கி பறந்து வந்து கொண்டிருந்தது. அப்போது, ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள கடம்பூர் அந்தியூர் கிராமத்தில் மோசமான வானிலை மற்றும் பனி மூட்டம் காரணமாக ஹெலிகாப்டர் தரையிறக்கப்பட்டது. ஹெலிகாப்டர் தரை இறங்கியதை அறிந்த கடம்பூர் மலைப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஹெலிகாப்டரை காண திரண்டனர்.
இதுகுறித்து, கடம்பூர் போலீசார் நடத்திய விசாரணையில், பனிமூட்டம் காரணமாக கடம்பூர் அருகேயுள்ள அத்தியூர் என்ற இடத்தில் ஹெலிகாப்டர் தரை இறங்கியதாகவும், கர்நாடகாவைச் சேர்ந்த பாரத்- ஷீலா என்ற வயதான தம்பதி, உடல்நலம் பாதித்து,சிகிச்சைக்காக கேரளா செல்வதாகவும் தகவல் வெளியாகியது, இதனை தொடர்ந்து பனிமூட்டம் விலகியதை அடுத்து மதியம் 1.30 மணியளவில் சிகிச்சைக்காக வந்த கணவன் மனைவியுடன் தனியார் ஹெலிகாப்டர் கேரளா நோக்கி புறப்பட்டு சென்றது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.