ஈரோட்டில் கனமழை: சாலைகளில் குளம் போல் தேங்கிய மழை நீரால் பொதுமக்கள் அவதி
ஈரோட்டில் இன்று (22ம் தேதி) காலை முதலே கனமழை பெய்து வருவதால் சாலைகள் மற்றும் தெருக்களில் மழைநீர் தேங்கியதால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர்.;
ஈரோடு - சித்தோடு சாலையில் வீரப்பன்சத்திரம் பேருந்து நிறுத்தம் அருகே சாலையில் தேங்கிய மழை நீரால் வாகனங்கள் மெதுவாக ஊர்ந்து செல்வதை படத்தில் காணலாம்.
ஈரோட்டில் இன்று (22ம் தேதி) காலை முதலே கனமழை பெய்து வருவதால் சாலைகள் மற்றும் தெருக்களில் மழைநீர் குளம் போல் தேங்கியதால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த 15ம் தேதி தொடங்கியது. இதனைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. ஈரோடு மாவட்டத்திலும் கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக சத்தியமங்கலம், தாளவாடி, அந்தியூர் பர்கூர் மலைப்பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
மாவட்டத்திலுள்ள முக்கிய அணைகளான பவானிசாகர், வரட்டுப்பள்ளம் அணை, குண்டேரிப்பள்ளம் அணை, பெரும்பள்ளம் அணை பகுதிகளில் கன மழை பெய்து வருவதால் அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. குண்டேரிப்பள்ளம் மற்றும் வரட்டுப்பள்ளம் அணைகள் பலத்த மழை காரணமாக தனது முழு கொள்ளளவை எட்டியுள்ளது. பவானிசாகர் அணை 90 அடியை நெருங்கியுள்ளது. மேலும், ஈரோடு மாநகரப் பகுதிகளும் இரவு நேரங்களில் பலத்த மழை பெய்து வந்தது.
இந்நிலையில், இன்று காலை 6 மணி முதல் ஈரோடு மாநகர் பகுதியில் பலத்த மழை பெய்ய தொடங்கியது. நேரம் செல்ல செல்ல இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதியில் மழைநீர் தேங்கியது. ஈரோடு வ.உ.சி. பெரிய காய்கறி மார்க்கெட் பகுதியில் கடந்த சில நாட்களாக பெய்த மழை காரணமாக சேரும் சகதியுமாக காட்சியளித்தது. இங்கு 700க்கும் மேற்பட்ட காய்கறி கடைகள் செயல்பட்டு வருவதால் மாவட்டம் முழுவதிலும் இருந்து நூற்றுக்கணக்கான வியாபாரிகள் மொத்த விலைக்கு காய்கறிகளை வாங்கி செல்வது வழக்கம்.
இந்நிலையில், இன்று காலை பெய்த கனமழை காரணமாக வ.உ.சி. மார்க்கெட்டில் மழைநீர் குளம் போல் தேங்கி நின்றது. இதனால், இன்று காலை காய்கறி வாங்க வந்த பொதுமக்கள், மொத்த வியாபாரிகள் கடும் அவதி அடைந்தனர். இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதேபோல், ஈரோடு அகில்மேடு வீதியில் உள்ள சின்ன காய்கறி மார்க்கெட் பகுதி முழுவதும் மழை நீர் புகுந்து குளம் போல் சூழ்ந்தது.
இதனால், பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர். சின்ன மார்க்கெட் வளாகத்திற்குள் அம்மா உணவகம் செயல்பட்டு வருகிறது. கனமழை காரணமாக அம்மா உணவகத்தையும் மழை நீர் சூழ்ந்தது. இதனால் அம்மா உணவகத்திற்கு வந்த பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகினர். இந்த பகுதியில் மழை நீருடன் கழிவு நீரும் சேர்ந்து சென்றதால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர்.
ஈரோடு வைரபாளையத்தில் கனமழை காரணமாக 4 வீடுகளுக்குள் மழை நீர் புகுந்தது. 6 மணிக்கு பெய்யத் தொடங்கிய மழை தொடர்ந்து பெய்து வந்ததால் மக்கள் கடும் அவதி அடைந்தனர். இதேபோல் மொடக்குறிச்சி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் கடந்த மூன்று நாட்களாக தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. இன்று காலை முதல் மொடக்குறிச்சி பகுதியில் கனமழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக மஞ்சள் நெல் பயிரிடப்பட்டிருந்த விவசாய நிலங்களுக்குள் மழை நீர் புகுந்தது. தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி நின்றது.
இதேபோல் கவுந்தப்பாடி சுற்றுவட்டார பகுதியில் நேற்று இரவு முதல் இடியுடன் கூடிய மழை பெய்து வருகிறது. சூறை காற்றும் வீசியது. இந்த காற்றுக்கு தாக்கு பிடிக்க முடியாமல் கூட்டுறவு வங்கி அருகே பொம்மன்பட்டி சாலை பகுதிகளில் மரங்கள் முறிந்தும் வேரோடு சாய்ந்தும் மின்சார கம்பிகள் மீது விழுந்தன. இதனால் பல்வேறு இடங்களில் மின்தடை ஏற்பட்டது. தொடர்ந்தும் இன்று காலை மழை பெய்து வருகிறது. காலை முதல் மழை பெய்து வருவதால் வேலைக்கு செல்லும் பணியாளர்கள், வியாபாரத்துக்கு செல்பவர்கள் கடும் அவதி அடைந்தனர்.
இதனையடுத்து, இன்று ஒரு நாள் ஈரோடு மாவட்டம் முழுவதும் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா உத்தரவிட்டுள்ளார். இது தெரியாமல் பல்வேறு இடங்களில் பள்ளிக்கு சென்ற மாணவர்கள் அவசர அவசரமாக வீடு திரும்பினர்.