அந்தியூர் அருகே பர்கூர் மலைப்பகுதியில் பலத்த மழை: சூறைக்காற்றால் சாலையில் மூங்கில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே பர்கூர் மலைப்பகுதியில் சூறைக்காற்றுடன் பெய்த பலத்த மழையால் சாலையில் மூங்கில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது.;
அந்தியூர் அருகே பர்கூர் மலைப்பகுதியில் சூறைக்காற்றுடன் பெய்த பலத்த மழையால் சாலையில் மூங்கில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள பர்கூர் மலைப்பகுதியில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வந்தது. இந்த நிலையில், நேற்று மாலை 5 மணியில் இருந்து 6 மணி வரை 1 மணி நேரம் சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்தது. இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கியது.
மேலும், தாமரைக்கரையில் இருந்து தட்டக்கரை செல்லும் மலைப்பாதையில் கால்நடை வன ஆராய்ச்சி மையம் அருகே பெய்த பலத்த மழையால் அங்கிருந்த மூங்கில் மரங்கள் ரோட்டில் விழுந்தன. இதனால், அந்த பகுதியில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. உடனே அந்த பகுதியை சேர்ந்த கிராம மக்கள் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ரோட்டில் விழுந்த மூங்கில் மரங்களை வெட்டி அப்புறப்படுத்தினர். இதைத்தொடர்ந்து அந்த பகுதியில் போக்குவரத்து சீரானது.