கோபி அருகே சரக்கு ஆட்டோவில் கடத்திய ரூ.16 ஆயிரம் குட்கா பொருட்கள் பறிமுதல்
கோபிசெட்டிபாளையம் அடுத்த பங்களாப்புதூர் அருகே சரக்கு ஆட்டோவில் கடத்திய ரூ.16 ஆயிரம் குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.;
கைது செய்யப்பட்ட மாரிமுத்து.
கர்நாடக மாநிலம் ஊகியம் பகுதியில் இருந்து ஈரோடு மாவட்டத்திற்கு குட்கா, பான்மசாலா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட பொருட்கள் கடத்தப்படுகின்றன. இதனை தடுக்க பங்களாப்புதூர் போலீசார் தீவிர வாகன சோதனை நடத்தி வருகின்றனர்.அதன்படி பங்களாப்புதூர் போலீசார் கே.என்.பாளையம் கடம்பூர் ரோடு வனச்சோதனை சாவடியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது ஊகியத்தில் இருந்து வந்த சரக்கு ஆட்டோவை மடக்கி அதில் இருந்த நபரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அந்த நபர் முன்னுக்குபின் முரணாக பதில் அளித்தார். இதனால் சந்தேகமடைந்த போலீசார் ஆட்டோவை சோதனை செய்தனர். அப்போது அதில் 135 பாக்கெட்டுகளில் ரூ.16,392 ரூபாய் மதிப்புள்ள தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் இருந்தன.
இதையடுத்து போலீசார் சரக்கு ஆட்டோவை குட்காவுடன் பறிமுதல் செய்து கோபி நஞ்சகவுண்டன்பாளையம் புதுக்காடு பகுதியை சேர்ந்த மாரிமுத்து (வயது 48) என்பவரை போலீசார் கைது செய்தனர்.