எடப்பாடி பழனிசாமி தரப்பு வேட்பாளருக்கு பெருகும் ஆதரவு
எடப்பாடி பழனிசாமி தரப்பு வேட்பாளருக்கு அதிமுகவிலும், கூட்டணி கட்சியினரிடையேயும் ஆதரவு பெருகி வருகிறது.;
ஈரோடு கிழக்குத் தொகுதி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினரான திருமகன் ஈவேரா கடந்த ஜனவரி 4-ஆம் தேதி திடீர் மாரடைப்பால் உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து ஈரோடு கிழக்கு தொகுதி காலியாக அறிவிக்கப்பட்டு, வரும் பிப்ரவரி 27ம் தேதி தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.
இந்த இடைத்தேர்தலில் திமுக கூட்டணியில் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். தேமுதிக சார்பில் ஆனந்த், நாம் தமிழர் சார்பில் மேனகா ஆகியோர் வேட்பளார்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் ஈரோடு கிழக்கு மாவட்டச் செயலாளர் ஏ.எம்.சிவபிரசாந்த் நேற்று வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.
இந்த நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதியில் முன்னாள் எம்எல்ஏ கே.எஸ்.தென்னரசு வேட்புமனு தாக்கல் செய்ய பொதுக்குழு உறுப்பினர்களிடம் ஒப்புதல் பெறுவதற்கான படிவங்களை இபிஎஸ் தரப்பு நேற்று விநியோகம் செய்துள்ளது.
இத்தொகுதியில் இருந்து அதிமுக வேட்பாளராக தென்னரசுவை அங்கீகரிக்கும் படிவத்தில் பொதுக்குழு கையெழுத்திடும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் அவர்களது பிரமாண பத்திரம் இன்று அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வந்து சேரும்.
அனைத்து ஆவணங்களிலும் அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் முறையாக கையொப்பமிட்டு, திங்கட்கிழமைக்குள் தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பிக்கப்படுவார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஈரோடு கிழக்கு தொகுதியில் நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் அக்கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் தொடர்பான தீர்மானத்தை நிறைவேற்றுமாறு அதிமுக பொதுக்குழுவில் உச்சநீதிமன்றம் கூறியதை அடுத்து இது நடைமுறைக்கு வந்துள்ளது.
பெரும்பான்மை உறுப்பினர்கள் தன் வசமிருக்க அதிமுக வேட்பாளரை ஒருமனதாக ஏற்கிறோம் என்ற கடிதத்தில் கையெழுத்திட்டு தலைமை கழகத்தில் ஒப்படைக்க உத்தரவு பறந்தது. இன்று (பிப்ரவரி 5) இரவு 7 மணிக்குள் அனைத்து பொதுக்குழு உறுப்பினர்களும் தங்கள் வேலையை முடித்தாக வேண்டும். இதனை மாவட்ட செயலாளர்கள் உறுதி செய்ய வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி மிகவும் கச்சிதமாக காய்களை நகர்த்தியுள்ளார்.
மேலும் பன்னீர்செல்வம் (ஓபிஎஸ்) உள்ளிட்ட கட்சியில் இருந்து நீக்கப்பட்ட மூவருக்கும் பொதுக்குழுவில் வாக்களிக்க அனுமதி அளித்துள்ளது குறிப்பிடதக்கது.
இதனிடையே ஈரோடு கிழக்கு தொகுதியில் அதிமுக சார்பில் முன்னாள் எம்எல்ஏ கே.எஸ்.தென்னரசு தான் வேட்பாளராக போட்டியிடுவார் என இபிஎஸ் தரப்பினர் அறிவித்துள்ளனர். இவருக்கு கட்சியினரிடையேயும் ஆதரவு பெருகி வருகிறது. மேலும் தென்னரசு வேட்பாளராக அறிவிக்கப்பட்டதற்கு ஓ.பன்னீர்செல்வம் இன்று முடிவை அறிவிப்பதாக தெரிவித்துள்ளார்.
மேலும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் கூறுகையில், இடைத்தேர்தல் வேட்பாளர் குறித்து ஓபிஎஸ் மற்றும் அவரது தரப்புக்கு கடிதம் அனுப்பப்பட்டு விட்டது. அவர்கள் தரப்பு வேட்பாளரை வாபஸ் வாங்குவது குறித்து, ஓபிஎஸ் தான் முடிவெடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் எடப்பாடி பழனிசாமி அணிக்கு இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத் ஆதரவு தெரிவித்துள்ளார்.