நடக்காத கிராம சபை கூட்டத்தை நடந்ததாக இணையதளத்தில் பதிவேற்றம்: பொதுமக்கள் போராட்டம்
பனியம்பள்ளி ஊராட்சியில் ஒத்திவைக்கப்பட்ட கிராம சபை கூட்டம் நடந்ததாக இணையதளத்தில் பதிவேற்றியதால் பொதுமக்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்;
சென்னிமலை ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட பனியம்பள்ளி ஊராட்சியில் கடந்த ஆகஸ்டு 15ம் தேதி சுதந்திர தினத்தன்று கிராம சபைக் கூட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த கூட்டத்தில் பனியம்பள்ளி ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் ரயில்வே துறைக்காக தனியாருக்காக நிலம் எடுக்கும் பணி, சிப்காட் கழிவுநீர் பிரச்னை, ஈங்கூர் மேம்பாலம் முதல் துலுக்கம்பாளையம் வரை சாலை பழுது உள்ளிட்ட பிரச்னைகளுக்காக இதுவரை முறையான தீர்வு எடுக்கப்படாமல் இருந்தது குறித்து பொதுமக்கள் விவாதம் செய்ய இருந்ததாகவும் தெரிகிறது.
மேலும் இந்த கூட்டத்துக்கு துறை சார்ந்த அதிகாரிகள் யாரும் வரவில்லை என கூறப்படுகிறது. இதனால் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டதாக மினிட் புத்தகத்தில் ஆவணப்படுத்தப்பட்டதாக தெரிகிறது.
இந்நிலையில் கிராம சபைக் கூட்டம் நடத்தி முடிக்கப்பட்டதாக சொல்லி தமிழக அரசின் இணையதளத்தில் தவறாக பதிவேற்றம் செய்து விட்டதாகவும், அதை இணையதளத்தில் மறு திருத்தம் செய்யவேண்டும் என கோரி பொதுமக்கள் ஊராட்சி அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்த தகவல் கிடைத்ததும், ஈரோடு ஊரக வளர்ச்சித்துறை உதவி இயக்குனர் சூர்யா சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அவர் பொதுமக்களிடம் கூறுகையில், 'இதுகுறித்து மாவட்ட ஆட்சியரின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய விசாரணை நடத்தி பொதுமக்களின் கோரிக்கைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும்,' என்றார்.
இதில் சமாதானம் அடைந்த பொதுமக்கள் தங்களுடைய காத்திருப்பு போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.