"பணி பாதுகாப்பு வேண்டும்" தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் வலியுறுத்தல்
ஆசிரியர்களுக்கு பணி பாதுகாப்பை வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வலியுறுத்தல்.
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் ஈரோட்டில் உள்ள தனியார் அரங்கில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில பொதுச்செயலாளர் முத்துராமசாமி தலைமை வகித்தார். மாநில துணைத்தலைவர் நடேசன் முன்னிலை வகித்தார். தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில், தமிழகத்தில் புதிய ஒய்வு திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்ட முறையை நடைமுறைப்படுத்த வேண்டும், ஊதிய முரண்பாட்டை களைய வேண்டும், மத்திய அரசு அறிவித்துள்ள 3 சதவீத அகவிலைப்படியை உடனடியாக வழங்க வேண்டும், தமிழக அரசு கடந்த ஆட்சியில் அறிவித்த 101 108 அரசாணையை ரத்து செய்து பழைய நடைமுறைகளில் உள்ளது போல தொடக்கக் கல்வியை தனியாக பிரித்து செயல்படுத்த வேண்டும். உள்ளிட்ட 12 தீர்மானமானங்கள் நிறைவேற்றப்பட்டது.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த, தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் பொதுச்செயலாளர் முத்துராமசாமி, தமிழக முதல்வர் ஸ்டாலின் பள்ளி குழந்தைகளுக்கு சிற்றுண்டி வழங்கப்படும், உயர்கல்வி மாணவியர்களுக்கு 1000 ரூபாய் வழங்கப்படும் என்ற அறிவிப்புகளுக்கு பாராட்டுகளை தெரிவித்து கொண்டார். அண்மையில் ஆசியர்கள் மீது மாணவர்கள் நடத்திய தாக்குதல் சம்பவம் உயர்நிலை மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றிருந்தாலும் கூட, ஆசிரியர்கள் சரியான முறையில் பணியாற்றும் வகையில் மருத்துவர்களுக்கு இருப்பது போல ஆசிரியர்களுக்கும் பணி பாதுகாப்பு உறுதி செய்யப்படுவதோடு சட்டவிரோதமாக செயல்படும் மாணவர்களை சட்டத்திற்கு உட்பட்டு தண்டிக்கின்ற வகையில் ஆசிரியர்கள் மற்றும் தலைமையாசிரியர்களுக்கு சிறப்பு அதிகாரத்தை வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.