கொடிவேரி தடுப்பணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு
கோபிச்செட்டிபாளையம் அருகே உள்ள கொடிவேரி தடுப்பணையில் இருந்து, தடப்பள்ளி மற்றும் அரக்கன்கோட்டை பாசன வாய்க்கால்களுக்கு, முதல்போக நஞ்சை சாகுபடிக்காக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.;
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கொடிவேரி தடுப்பணையானது பவானி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது. இதன் இரு கரைகளிலும் தடப்பள்ளிமற்றும் அரக்கன்கோட்டை ஆகிய இரு பாசன வாய்க்கால்கள் உள்ளன. இந்த பாசன வாய்க்கால்கள் மூலம், 24ஆயிரத்து504 ஏக்கர் விளைநிலங்கள் நேரடி பாசனம் பெற்று வருகிறது.
ஒவ்வொரு ஆண்டும் கொடிவேரி தடுப்பiணியில் இருந்து பிப்ரவரி மாதத்தில், முதல்போக சாகுபடிக்கு தண்ணீர் திறப்பது வழக்கம். இந்தாண்டு தடப்பள்ளி மற்றும் அரக்கன்கோட்டை பாசன வாய்க்கால்களில் நடைபெற்று வந்த கான்கிரீட் தளம் அமைக்கும் பணியினால், தண்ணீர் திறப்பு ஒத்திவைக்கப்பட்டது.
தற்போது, கான்கிரீட் தளம் அமைக்கும் பணிகள் 35 சதவிகிதம் முடியுற்ற நிலையில், தடப்பள்ளி அரக்கன்கோட்டை வாய்க்கால்களில் முதல்போக சாகுபடிக்கு தண்ணீர் திறக்க வேண்டும் என, கொடிவேரி அணை பாசன விவசாயிகள் , தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்தனர்.
இதையடுத்து, தமிழக அரசு தேர்தல் விதிமுறைகள் அமுலில் உள்ள நிலையில் விதிமுறைகளுக்கு உட்பட்டு பாசனத்திற்கு தண்ணீர் திறக்க உத்தரவு வழங்கியது. அதன் அடிப்படையில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் பாசன விவசாயிகள் முன்னிலையில், கொடிவேரி தடுப்பணையில் இருந்து தடப்பள்ளி, அரக்கன்கோட்டை பாசன வாய்காலில் முதல்போக நஞ்சை சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
முதற்கட்டமாக தடப்பள்ளி வாய்க்காலுக்கு விநாடிக்கு 200 கனஅடியும், அரக்கன்கோட்டை பாசன வாய்க்காலுக்கு விநாடிக்கு 100 கனஅடியும் திறக்கப்பட்டுள்ளது. தடப்பள்ளி, அரக்கன்கோட்டை பாசன வாய்க்கால்களில் முதல் போக நஞ்சை சாகுபடிக்கு தொடர்ந்து 120 நாட்களுக்கு திறக்கப்படவுள்ள நீரால், கோபிசெட்டிபாளையம், அந்தியூர், பவானி ஆகிய மூன்று தாலுக்காக்களில் உள்ள 24ஆயிரத்து504 ஏக்கர் நிலங்கள் நேரடி பாசனம் பெறுகிறது.
பாசனத்திற்கு திறக்கப்பட்ட நீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. கான்கிரீட் தளம் அமைக்கும் பணி 35 சதவிகிதம் மட்டுமே முடிவுற்ற நிலையில் முதல்போக சாகுபடி முடியுற்ற பின்னர் மீண்டும் பணிகள தொடங்கப்படும் என பொதுப்பணித்துறையினர் தெரிவித்துள்ளனர்.