சாணார்பதி பகுதியில் ஈமச்சடங்கு செய்ய முடியாமல் தவிக்கும் கிராம மக்கள்
புதிய பாலம் வரும் என இருந்த பழைய பாலத்தையும் விட்டுவிட்டு இறந்தவர்களுக்கு ஈமச்சடங்குகளை நிறைவேற்ற முடியாமல் தவிக்கும் கிராம மக்கள்.
ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையம் அருகே உள்ள சாணார்பதி பகுதியில் சுமார் 150 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களின் மயான பயன்பாட்டிற்காக அதே பகுதியில் 75 சென்ட் பரப்பளவிலான இடத்தை சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்பு நஞ்சகவுண்டன்பாளையத்தை சேர்ந்த ஒருவர் தானமாக கொடுத்து உள்ளார்.
தானமாக கொடுத்த மயானமானத்திற்கும் இப்பகுதிக்கும் இடையே தடப்பள்ளி வாய்க்கால் மற்றும் கீரிப்பள்ளம் ஓடை செல்கிறது. இதனால் மயானத்திற்கு செல்ல ஏதுவாக கீரிப்பள்ளம் ஓடை மேல் சுமார் 4 அடி உயரத்தில் தரை மட்ட பாலம் கட்டப்பட்டு இருந்தது. இந்நிலையில் கடந்த 10 ஆண்டுக்கு முன்பு அப்போதைய வருவாய்த்துறை அமைச்சராகவும், கோபி தொகுதி சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்த செங்கோட்டையன், அந்த தரை மட்ட பாலத்தை இடித்து விட்டு உயரமான புதிய பாலம் கட்டி தருவதாக கூறி பழைய பாலம் இடிக்கப்பட்டு பூமி பூஜைபோடப்பட்டதாக கூறப்படுகிறது.
ஆனால் இதுவரை மூன்று முறை பாலம் கட்டுவதற்கான பூமி பூஜை மட்டும் போட்டுள்ளதாகவும் இதுவரை பாலம் கட்டுவதற்கான எந்த முயற்சியும் எடுக்கவில்லை என அப்பகுதியினர் குற்றம் சாட்டுகின்றனர். இதனால் சாணார்பதியில் யாரேனும் இறந்து விட்டால் அவரது உடலை சுமந்து கொண்டு, கீரிப்பள்ளம் ஓடையில் சாக்கடை நீரில் இறங்கியே மயானத்திற்கு சென்று அடக்கம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் சாணார்பதியை சேர்ந்த முருகையன்(70) என்பவர் வயது மூப்பின் காரணமாக உயிரிழந்தார். ஆனால் கீரிப்பள்ளம் ஓடையிலும் தடப்பள்ளி வாய்க்காலிலும் அதிகளவு தண்ணீர் செல்வதால் அவரது உடலை அடக்கம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து கீரிப்பள்ளம் ஓடையின் குறுக்கே சுமார் 60 அடி நீளத்திற்கு தற்காலிக பாலம் அமைத்து முருகையனின் உடலை மயானத்திற்கு எடுத்து செல்ல கிராம மக்கள் முடிவு செய்தனர்.
அதன்படி கிராமத்தினர் அனைவரும் சேர்ந்து 20 ஆயிரம் ரூபாய் செலவில் மூங்கில் மற்றும் பலகையாலான தற்காலிக பாலம் அமைத்து முருகையனின் உடலை மயானத்திற்கு எடுத்துச்சென்று அடக்கம் செய்தனர். இந்நிலையில் ஓடையின் குறுக்கே பாலம் அமைத்து சடலத்தை எடுத்து செல்வது குறித்து தகவலறிந்த கோபி தாசில்தார் தியாகராஜன் மற்றும் வருவாய்த்துறையினர், டி.எஸ்.பி ஆறுமுகம் மற்றும் போலீசார் அப்பகுதிக்கு வந்து விசாரணை மேற்கொண்டு வருகி்றனர்.