விடியவிடிய சாரல் மழை - குளிர்ந்து போனது மஞ்சள் நகரம்

ஈரோடு மாவட்டத்தில் விடிய விடிய சாரல் மழை பெய்தது. மழையால், ஈரோடு நகரம் குளிர்ந்தது. அதிகபட்சமாக கவுந்தப்பாடியில் 65 மி.மீ மழை பதிவாகி இருக்கிறது.

Update: 2021-07-02 04:24 GMT

ஈரோடு நகரில், குடை பிடித்தபடி மழையை ரசித்துக் கொண்டே சைக்கிளில் சவாரி செய்கிறார் ஒருவர். 

ஈரோடு மாவட்டம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில், சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்து வந்தது. அதிகபட்சமாக 102 டிகிரிக்கு மேல் வெயில் வெளுத்து வாங்கியது.

வெயில் தாக்கம் காரணமாக பொது மக்கள் நடமாட்டமின்றி ரோடுகள் வெறிச்சோடி காணப்பட்டன; அனல் காற்றால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்திற்குள்ளாகினர். இரவு நேரங்களிலும் தூங்க முடியாமல் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை புழுக்கத்தால் அவதி அடைந்து வந்தனர்.

ஈரோடு மாவட்டத்தில் நேற்று காலை வழக்கம்போல் வெயிலின் தாக்கம் இருந்தது. எனினும், மாலையில் திடீரென மேகமூட்டத்துடன் காணப்பட்டது. பின்னர் மாவட்டம் முழுவதும் பெரும்பாலான பகுதிகளில் சாரல்மழை பெய்ய தொடங்கியது.

மாலையில் தொடங்கிய இந்த சாரல் மழையானது இரவு முழுவதும் பெய்தது. இந்த திடீர் மழையால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது. ஈரோடு நகரமும் மழையால் குளிர்ந்தது.  மாவட்டத்தில் அதிகபட்சமாக கவுந்தபாடியில் 65 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.

இதேபோல் மாவட்டம் முழுவதும் 257.6 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. மாவட்டத்தில் நேற்று மாலை முதல் விடிய விடிய பெய்த இந்த திடீர் மழையால்,  வெப்ப நிலை மாறி குளிர்ந்த காற்று வீசியதால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags:    

Similar News