கோபியில் கனமழை: நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதம்
கோபிசெட்டிபாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் திறந்த வெளியில் வைத்திருந்த நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதம்.
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் பகுதியில் தடப்பள்ளி மற்றும் அரக்கண்கோட்டை பாசன பகுதியில் சுமார் 24 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் நெற்பயிர்கள் பயிரிடப்பட்டுள்ளன. இங்கு அறுவடை செய்யப்படும் நெல்லை விவசாயிகள் விற்பனை செய்யவதற்காக அரசு சார்பில் 20 க்கும் மேற்பட்ட இடங்களில் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அமைக்கப்பட்ட கொள்முதல் நிலையங்கள், பெரும்பாலும் திறந்த வெளியில் அமைந்துள்ளதாலும், இடப்பற்றாக்குறை காரணமாகவும், விவசாயிகள் தங்களது நெல் மூட்டைகளை பாதுகாப்பாக வைப்பதில் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகின்றனர்.
இந்நிலையில் கோபிசெட்டிபாளையம் பகுதியில் நேற்று மாலை பெய்த கனமழை காரணமாக கொள்முதல் நிலையங்களில் வைக்கப்பட்டிருந்த நெல் மூட்டைகள் நனைந்து சேதமாகியது. இதன் காரணமாக விற்பனை செய்ய வழியின்றி விவசாயிகள் கடும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளனர்.
மேலும் நனைந்த நெல் மூட்டைகளை உலர்த்துவதற்கான இடம் இல்லாததால் நனைந்த நெல் மூட்டைகளை டிராக்டர் மூலம் வேறு இடங்களுக்கு எடுத்து செல்கின்றனர். இதனால் விவசாயிகளுக்கு கூடுதலாக செலவு ஏற்படுவதாக வேதனை தெரிவிக்கின்றனர். இனி வரும் காலங்களில் அதிக இடவசதியுடனும் கொள்முதல் நிலையங்களில் மேற்க்கூரை அமைக்கவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.