சூறாவளிக்காற்றில் வாழை சேதம் : விவசாயிகள் வேதனை
கோபி அருகே வீசிய சூறாவளிக்காற்றில் அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த வாழை சேதம்
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சுற்றுவட்டாரப்பகுதிகளில் நேற்று இரவு திடீரென சூறாவளிக்காற்று வீசியது. இதனால், கோபிசெட்டிபாளையம் நகர் பகுதி முழுவதும் புழுதிப்படலம் நிரம்பியது. புழுதியால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் மிகவும் அவதியடைந்தனர்.
இந்த சூறாவளிக்காற்று கணக்கம்பாளையம், கள்ளிப்பட்டி, டி.என்.பாளையம், மோதூர், கொங்கர்பாளையம், காளியூர் உள்ளிட்ட பகுதிகளிலும் பலமாக வீசியது. இதனால் அப்பகுதிகளில் 30 ஏக்கருக்கும் மேல் பயிரிடப்பட்டிருந்த மொந்தன், நேந்திரம், செவ்வாழை, கதளி, தேன்கதிர் போன்ற ரக வாழை சேதமடைந்தது. இன்னும் சில தினங்களில் அறுவடை செய்யவேண்டிய நிலையில் இருந்த 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாழை சாய்ந்து சேதமடைந்தன.
இதில், காளியூர் பகுதியில் நேந்திரம் ரக வாழை 3500, அரக்கன்கோட்டை பகுதியில் மொந்தன் ரக வாழை 2000 என ஏராளமான வாழை சாய்ந்து சேதமடைந்தன. இதனால் விவசாயிகளுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது. ஓர் ஆண்டாக முதலீடு செய்து அறுவடைக்கு தயாராக இருக்கும்போது அனைத்தும் சேதமடைந்துவிட்டதால் விவசாயிகள் பெரும் வேதனைக்கு உள்ளாகியுள்ளனர்.
எனவே, சூறாவளிக்காற்றினால் சேதமடைந்த வாழைக்கு, அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றும், தனிநபர் பயிர் காப்பீட்டு திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்றும் வாழை விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.