கோபிச்செட்டிபாளையத்தில் போலி டாக்டர் கைது

கோபிச்செட்டிபாளையத்தில் அலோபதி மருத்துவம் பார்த்து, மருந்து மாத்திரைகளை வழங்கி வந்த புகாரில் போலி டாக்டர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Update: 2021-05-27 10:52 GMT

ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையம் கரட்டுப்பாளையம் ரோடு காசிபாளையத்தில் நாகராஜ் என்பவர், தனது வீட்டில் அலோபதி மருத்துவம் பார்த்து, பொதுமக்களுக்கு மருந்து மாத்திரைகளை வழங்கி வருவதாக புகார் வந்தது.

அதன்பேரில், காசிபாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் டாக்டர் யசோதா பிரியா, சுகாதார ஆய்வாளர், சுகாதார மேற்பார்வையாளர், கிராம நிர்வாக அலுவலர் ஆகியோருடன், கடத்தூர் போலீசார் நாகராஜ் (58) வீட்டில் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது, மருத்துவ கவுன்சில் அனுமதியின்றி மருந்துகள், மாத்திரைகள், ஊசிகள் போன்றவற்றை, அவர் வைத்திருந்தது தெரியவந்தது. மேலும், நாகராஜ் மருத்துவப்படிப்பு படிக்காமலும், மருத்துவச்சான்று ஏதுவும் இல்லாமல் மக்களை ஏமாற்றி சிகிச்சை அளித்து வந்தது தெரியவந்தது.

இதையடுத்து, கடத்தூர் போலீசார் நாகராஜ் மீது மோசடி மற்றும் மருத்துவ கவுன்சில் சட்டத்தின்படி வழக்கு பதிந்து கைது செய்தனர். கைதான நாகராஜிடம் இருந்து 180 காய்ச்சல் மாத்திரைகள், ஊசி, மருந்துகள், மருந்துகள் கொள்முதல் செய்யப்பட்ட ரசீது போன்றவற்றை கைப்பற்றினர்.

நாகராஜ்க்கு மருந்துகள் வழங்கிய முகவர்கள் யார்  என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் கோபியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Tags:    

Similar News