கொலை மிரட்டல் வழக்கில் அதிமுக ஒன்றிய செயலாளர் கைது
கொலை மிரட்டல் வழக்கில் நம்பியூர் ஒன்றிய அதிமுக செயலாளரை போலீசார் நேற்று கைது செய்தனர்.;
ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையம் அருகே உள்ள நம்பியூர் ஒன்றிய அதிமுக செயலாளராக கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக தம்பி என்கிற சுப்பிரமணியம் இருந்து வருகிறார். இந்நிலையில் வெள்ளகோயில்பாளையத்தில் கடந்த 14ம் தேதி தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் நம்பியூர் சுப்பிரமணியம் தனது ஆதரவாளர்களுடன் கூட்டமாக சென்று தடுப்பூசி போட காத்திருந்தவர்களுக்கு பிஸ்கட், தண்ணீர் பாட்டில் வழங்கியுள்ளார்.
அப்போது கோசனம் பொத்தபாளையத்தை சேர்ந்த இளங்கோ என்பவர் கொரோனா தடை உத்தரவு உள்ள நேரத்தில் இது போன்று கூட்டமாக செயல்படலாமா? என்று கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சுப்பிரமணியம், இளங்கோவை தகாத வார்த்தையில் பேசி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து இளங்கோ அளித்த புகாரின் பேரில் 4 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் நேற்று அதிகாலை வீட்டில் இருந்த அதிமுக ஒன்றிய செயலாளர் சுப்பிரமணியத்தை கைது செய்து சிறுவலூர் காவல்நிலையம் அழைத்து சென்றனர்.
பின்னர், சுப்பிரமணியத்துக்கு கோபி அரசு மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை செய்து, நீதிபதி விசுநாதன் வீட்டில் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதி சுப்ரமணியத்தை 15 நாள் காவலில் வைக்க உத்தரவிட்டார். அதைத்தொடர்ந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கோபியில் உள்ள மாவட்ட சிறையில் சுப்பிரமணியம் அடைக்கப்பட்டார். இதனிடையே முன்னாள் அமைச்சரும் தற்போதைய கோபிச்செட்டிபாளையம் எம்எல்ஏவுமான செங்கோட்டையன் ஒன்றிய செயலாளர் சுப்மணியத்தை சிறையில் சந்தித்து பேசியதாக கூறப்படுகிறது. முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனின் வலதுகரமாக சுப்பிரமணியம் செயல்பட்டு வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
1. நம்பியூர் சுப்பிரமணியம் தனது ஆதரவாளர்களுடன் கூட்டமாக சென்று தடுப்பூசி போட காத்திருந்தவர்களுக்கு பிஸ் கட், தண்ணீர் பாட்டில் வழங்கியது.
2. கைது செய்யப்பட்ட அதிமுக ஒன்றிய செயலாளர் சுப்ரமணியம்