கோபிச்செட்டிப்பாளையம்: அதிகாரிகள் சோதனை... அடுத்தடுத்து சிக்கிய 3 போலி டாக்டர்கள்!
கோபிச்செட்டிப்பாளையம் அருகே அதிகாரிகள் மேற்கொண்ட அதிரடி சோதனையில், 3 போலி டாக்டர்கள் சிக்கினர்.;
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அடுத்த கூகலூரில், கொளத்துகடை பகுதியில் சிலர் போலி மருத்துவம் பார்த்து வருவதாக கூகலூர் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் சையது இப்ராகிம், வருவாய் கோட்டாட்சியரிடம் புகார் ஒன்றை அளித்தார். அதன்பேரில், வருவாய் கோட்டாட்சியர் பழனிதேவி தலைமையிலான அதிகாரிகள் அப்பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர்.
ஆய்வின்போது, 11 ம் வகுப்பு படித்த மணிகண்டன் என்பவர் போலியாக மருத்துவம் பார்த்து வந்தது கண்டுபிடிக்கபட்டது. இதையடுத்து அவரிடம் இருந்த மருந்து மாத்திரைகளை கைப்பற்றி, அவரது கிளினிக்கிற்கு சீல் வைத்து, கோபி போலீசார் அவரை கைது செய்தனர்.
தொடர்ந்து அப்பகுதியில் மேற்கொண்ட ஆய்வில் ஹோமியோபதி டாக்டர் சுபா என்பவர், அப்பகுதியில் மினி கிளினிக் ஒன்றை துவங்கி பொதுமக்களுக்கு ஆங்கில மருத்துவம் பார்த்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவரை வீட்டுக்காவலில் அதிகாரிகள் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகினர்.
இதேபோல் நோயாளிகளுக்கு ஊசி போடுவது மற்றும் கொரோனா நோயாளிக்கு மருந்து மாத்திரைகள் வழங்கி மருத்துவம் பார்த்து வந்த மருந்துக்கடைக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். இதுதொடர்பாக தகவலறிந்து தலைமறைவான மருந்துக்கடை உரிமையாளர் ராமகிருஷ்ணன் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.