சிறுவலூர் பச்சை நாயகியம்மன் கோயில் குண்டம் திருவிழா

கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள சிறுவலூரில் பிரசித்தி பெற்ற பச்சைநாயகியம்மன் கோயில் குண்டம் திருவிழா.

Update: 2021-03-04 06:51 GMT

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே சிறுவலூர் பச்சைநாயகியம்மன் கோயில் குண்டம் மற்றும் தேர்த்திருவிழா நடைபெற்றது.

ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதத்தில் நடைபெறும் இந்த திருவிழா, கடந்தாண்டு கொரோனா பொதுமுடக்கத்தால் நடைபெறவில்லை. இந்நிலையில் இந்தாண்டு, பிப்ரவரி 17ம் தேதி பூச்சாட்டுதலுடன் திருவிழா தொடங்கியது.

அதனைத்தொடந்து, மார்ச் 1ம் தேதி சந்தனக்காப்பு அலங்காரமும், 2ம் தேதி கிராமசாந்தியும் நடைபெற்றது. 3ம் தேதி காப்பு கட்டுதல், பட்டத்தரசி அம்மன் பொங்கல் வைத்தல், திறப்பு மற்றும் தீ மூட்டுதல் போன்ற நிகழ்வுகள் நடைபெற்றன. இன்று அம்மனை அழைத்தல், வாக்கு கேட்டல் போன்ற நிகழ்வுகளை தொடர்ந்து கொடி ஏற்றப்பட்டு குண்டத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.

பின்னர் தலைமை பூசாரி சக்திவேல் முதலில் குண்டம் இறங்கி, நிகழ்வினை தொடங்கி வைத்தார். அதனை தொடர்ந்து 15 நாட்கள் கடும் விரதமிருந்த ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என 10க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட பக்தர்கள் குண்டம் இறங்கி நேர்த்திகடன் செலுத்தினர்.

பக்தர்கள் அனைவருக்கும் பச்சைநாயகியம்மன் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார். இவ்விழாவிற்கு சிறுவலூர் காவல்துறையினர் சார்பில் 20க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். பக்தர்களுக்கு கோயில் அறங்காவலர் குழுவின் சார்பில் சிறப்பு அன்னதானம் வழங்கப்பட்டது. 

Tags:    

Similar News