ஈரோடு பூம்புகார் விற்பனை நிலையத்தில் விநாயகர் சிலை கண்காட்சி, விற்பனை
ஈரோடு மேட்டூர் ரோட்டில் உள்ள அரசு நிறுவனமான பூம்புகார் விற்பனை நிலையத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, புதிய விநாயகர் சிலைகள் கண்காட்சி மற்றும் விற்பனை துவங்கியது.
தமிழ்நாடு அரசுக்கு சொந்தமான தமிழ்நாடு கைத்திறத் தொழில்கள் வளர்ச்சிக் கழகத்தின் பூம்புகார் விற்பனை நிலையமானது அனைத்து ஏழை கைவினை கலைஞர்களது படைப்புகளையும் பல கண்காட்சிகளை நடத்தி சந்தை வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்து அவர்களது வளர்ச்சிக்காக செயல்பட்டு வருகின்றது.
இதன் அடிப்படையில் விநாயகர் சதுர்த்தி கண்காட்சி மற்றும் விற்பனை ஈரோடு- மேட்டூர் ரோட்டில் உள்ள பூம்புகார் விற்பனை நிலைய உள்வளாகத்தில் கண்காட்சி அமைத்து நடத்தப்படுகிறது. இந்த கண்காட்சி 22.08.2022 முதல் 31.08.2022 வரை நடைபெற உள்ளது.
ஈரோட்டில் இக்கண்காட்சியினை நேற்று மாலை பூம்புகார் விற்பனை நிலைய மேலாளர் சரவணன் தலைமையில் துவங்கப்பட்டது. இக்கண்காட்சியில் பஞ்சலோகம், பித்தளை, பேப்பர்கூழ் மண் வெள்ளெருக்குவேர், மார்பில் பவுடர். மாவுக்கல், கருங்கல், போன்றவைகளினால் தயாரிக்கப்பட்ட விநாயகர் சிலைகள் மற்றும் வெண்மரம், நூக்கமரம், கருப்பு உலோகம், வெள்ளை உலோகம், ஸ்படிக விநாயகர் மற்றும் தஞ்சாவூர் ஓவியம், கலை தட்டுகளில் செய்யப்பட்ட விநாயகர் மற்றும் பல்வேறு வகை வண்ண வடிவங்களில் விநாயகர் கண்காட்சியில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது.. இக்கண்காட்சியில் ரூ.75/- முதல் ரூ.1,00,000/- வரை உள்ள விநாயகர் சிலைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது.