ஈரோடு மாவட்டம்: 17,553 மாணவ மாணவிகளுக்கு அரசின் விலையில்லா மிதிவண்டி

ஈரோடு மாவட்டத்தில் 127 பள்ளிகளை சேர்ந்த 17,553 பிளஸ்2 மாணவ மாணவிகளுக்கு அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கப்படவுள்ளது.

Update: 2022-09-05 13:15 GMT

நிகழ்ச்சியில் பேசிய வீட்டு வசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி.

ஈரோடு வீரப்பன்சத்திரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பள்ளிக் கல்வித்துறை சார்பில், மாணவ மாணவியர்களுக்கு அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி தலைமை வகித்தார். தமிழக வீட்டுவசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி கலந்து கொண்டு பன்னிரண்டாம் வகுப்பு பயிலும் 395 மாணவிகளுக்கு விலையில்லா மிதி வண்டிகளை வழங்கினார்.


தொடர்ந்து, நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர், ஈரோடு மாவட்டத்தில் 127 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளைச் சேர்ந்த 17 ஆயிரத்து 553 பிளஸ் 2 பயிலும் மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்படும். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசு பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்கு உயர் கல்வி பயில மாதந்தோறும் 1000 ரூபாய் வழங்கும் புதுமைப்பெண் திட்டத்தை துவக்கி வைத்துள்ளார்.


இது மாணவிகளின் கல்வி முன்னேற்றத்திற்கு பெரிதும் உதவும் எனவும், இப்பள்ளியில் போதிய இடவசதி இல்லை இருப்பினும் கூடுதல் இடம் பெற ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு கூடுதல் வகுப்பறை கட்டிடம் கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என பேசினார். பள்ளியில் 1600 மாணவிகள் படிக்கின்றனர். ஆனால், போதிய வகுப்பறை இல்லாததால் கூடுதலாக பத்து வகுப்பறையில் கொண்ட கட்டிடம் கட்ட வேண்டும் என்று ஆசிரியர்கள் கேட்டுக் கொண்டனர்.


இப்பள்ளியில் கடந்த ஆண்டு மூன்று மாணவிகள் 7.5%  இட ஒதுக்கீட்டின் கீழ் மருத்துவ படிப்பில் சேர்ந்துள்ளதாக கூறினார். நடைபெற்ற நிகழ்ச்சியில் கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் திருமகன் ஈவேரா, ஈரோடு மக்களவை உறுப்பினர் கணேசமூர்த்தி, மேயர் நாகரத்தினம் சுப்பிரமணியம், துணை மேயர் செல்வராஜ், முதன்மை கல்வி அதிகாரி அய்யணண் உட்பட பலர் கலந்து கொண்டனர்

Tags:    

Similar News