அந்தியூரில் பள்ளி மாணவர்கள் உள்பட 4 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு!
ஈரோடு மாவட்டம் அந்தியூரில் பள்ளி மாணவர்கள் உள்பட 4 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.;
அந்தியூரில் பள்ளி மாணவர்கள் உள்பட 4 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டம் அந்தியூர் காலனி பகுதியில் 5ம் வகுப்பு மற்றும் 3ம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவர்கள் உள்பட 4 பேருக்கு கடந்த சில நாட்களாக காய்ச்சல் இருந்து வந்துள்ளது. இதற்காக அவர்கள் சிகிச்சை பெற்றும் நோய் குணமாகவில்லை. இதைத்தொடர்ந்து ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் ரத்த பரிசோதனை செய்தனர். இதில் 4 பேருக்கும் டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதியாகியுள்ளது. இதையடுத்து 4 பேருக்கும் மருத்துவமனையில் டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
ஒரே பகுதியில் 4 பேருக்கு டெங்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளதால் அந்த பகுதி மக்கள் பீதியடைந்துள்ளனர். இதனால் அந்த பகுதியில் தடுப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அந்தியூர் வட்டார மருத்துவ அதிகாரி டாக்டர் சக்திகிருஷ்ணன் தலைமையில் மருத்துவ குழுவினர் அந்த பகுதியில் முகாம் அமைத்து சுகாதார பணியாளர்கள் மூலம் வீடு வீடாகச் சென்று மருத்துவ பரிசோதனை செய்து வருகின்றனர். மேலும் அவர்களுக்கு தேவையான மருந்து, மாத்திரைகள் வழங்கப்படுகிறது.
இதுதவிர கிராமங்கள்தோறும் சென்று பொதுமக்களுக்கு ஒலிபெருக்கி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். மழைக்காலங்களில் தங்கள் பகுதியை சுத்தமாக வைத்துக் கொள்ளவும், குடிநீரை முறை யாக பாதுகாக்கவும் அறிவுறுத்தியுள்ளனர். மழை நீர் தேங்கி நிற்கக்கூடிய பொருட்களை அப்புறப்படுத்தி ப்ளீச்சிங் பவுடர் போட்டு சுகாதார பணிகளும் செய்து வருகின்றனர்.