திமுகவில் எந்தவித கசப்புணர்வும் இல்லை.. முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாச்சலம் ஈரோட்டில் பேட்டி…
திமுகவில் எந்தவித கசப்புணர்வும் இல்லை என முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாச்சலம் ஈரோட்டில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
ஈரோடு மாவட்டம், பெருந்துறை பகுதியைச் சேர்ந்தவர் தோப்பு வெங்கடாச்சலம். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அமைச்சரவையில் சுற்றுச்சூழல் மற்றும் வருவாய்துறை அமைச்சராக சில ஆண்டுகள் இருந்தார். மேலும், பெருந்துறை சட்டமன்ற தொகுதியில் இருந்து இரண்டு முறை சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட பெருந்துறை தொகுதியில் தோப்பு வெங்கடாச்சலத்திற்கு வாய்ப்பு வழங்கப்படாததால், அந்தத் தொகுதியில் சுயேச்சையாக களம் இறங்கினார்.
இருப்பினும், சுயேச்சையாக போட்டியிட்ட தோப்பு வெங்கடாசலம் 9 ஆயிரத்து 791 வாக்குகளை மட்டுமே பெற்றார். இதனால், அவர் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து கடந்த ஆண்டு ஜூலை மாதம் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் தனது ஆதரவாளர்களுடன் தோப்பு வெங்கடாச்சலம் திமுகவில் ஐக்கியமானார்.
தொடர்ந்து, பெருந்துறை சட்டமன்ற தொகுதியில் நடைபெற்ற பல்வேறு கட்சி நிகழ்ச்சிகளில் அவர் கலந்து கொண்டு வந்தார். தோப்பு வெங்கடாச்சலம் திமுகவில் இணைந்து போதிலும் அவருக்கு பெரிய அளவிலான பதவி ஏதும் வழங்கப்படவில்லை.
இதனால், கட்சியில் செயல்பாடுகளில் இருந்து கடந்த சில மாதங்களாகவே தோப்பு வெங்கடாச்சலம் ஒதுங்கி இருந்து வருகிறார். இதனால், திமுகவில் இருந்து விலகி பாரதிய ஜனதா கட்சியில் தோப்பு வெங்கடாச்சலம் இணைய போவதாக தகவல் பரவியது.
இதுதொடர்பாக முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாச்சலம் இன்று வெளியிட்ட அறிக்கையில், யூகத்தின் அடிப்படையில் பாஜகவுக்கு செல்வதாக தகவல் பரவுகிறது. தற்போது வரை நான் திராவிட முன்னேற்றக் கழகத்தில் தான் இருந்து வருகிறேன் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்து இருந்தார்.
திமுகவில் எந்தவித கசப்புணர்வும் இல்லை:
இந்த நிலையில் ஈரோட்டில் தோப்பு வெங்கடாச்சலம் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கடந்த 10 நாட்களாக ஊடகங்களில் என்னைப்பற்றி பல்வேறு யூகங்கள் அடிப்படையில் மாற்று இயக்கத்திற்கு செல்கிறார் என தொடர்ந்து வருகிறது. தவறான செய்தி. யூகத்தின் அடிப்படையில் வரும் செய்திக்கு விளக்கங்கள் தருகிறேன். பாஜகவுக்கு செல்வதாக வந்த தகவல் உண்மைக்கு மாறான செய்தி.
திமுகவில் சேர்ந்து ஒன்றரை ஆண்டுகள் ஆகிறது. இருக்கும் இடத்திற்கு விசுவசமாக இருப்பேன். தற்போது வரை திமுகவில் தான் இருக்கிறேன். அரசியலில் போட்டி, பொறாமை இருக்கும் என்பதால் மாற்று இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் எனது நற்பெயருக்கு களங்கம் கற்பிக்க முயற்சியாக கூட இருக்கலாம்.
திமுகவில் பொறுப்பு கொடுக்கவில்லை என நான் யாரிடம் சொல்லவில்லை. நான் பொறுப்போடு இருப்பவன். ஒரு அரசியல் கட்சியில் இருந்தால் பல்வேறு நண்பர்கள் இருக்கிறார்கள். பாஜகவிலும் நண்பர்கள் இருக்கிறார்கள். சில நண்பர்கள் கேட்டு உள்ளனர்.
திமுகவில் எந்தவித கசப்புணர்வும் இல்லை. திமுகவில் தொண்டனாகவே தான் இருக்கிறேன். ஒபிஎஸ் தரப்பில் இருந்து கூட அழைப்பு வந்தது. நான் மறுத்து விட்டேன். நெருப்பு இல்லாமல் புகையாது. நெருப்பு எங்கு உள்ளது என தேடி வருகிறேன். பொறுப்பு எப்போது கொடுக்க வேண்டும் என தலைமை முடிவு செய்யும். நான் பொறுப்பு கேட்கவில்லை என தோப்பு வெங்கடாச்சலம் தெரிவித்தார்.