ஈரோடு கிழக்கில் அதிமுக வெற்றி பெறும்: செங்கோட்டையன்

ஈரோடு கிழக்கில் அதிமுக பெறும் வெற்றி நாடாளுமன்ற தேர்தலில் எதிரொலிக்கும் என முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.;

Update: 2023-01-31 09:15 GMT

செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த செங்கோட்டையன்.

ஈரோடு கிழக்கு தொகுதியில் அதிமுக தேர்தல் பணிமனை நாளை திறக்கப்படுகிறது. நாளை முதல் தேர்தல் பிரச்சாரத்தை தீவிரமாக துவக்குவோம் என்று அண்ணா திமுக தேர்தல் பணி குழு தலைவரும் எம்எல்ஏ-வுமான செங்கோட்டையன் கூறினார்.

ஈரோடு கிருஷ்ணம்பாளையம் ஓங்காளியம்மன் கோயில் அருகே உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், உச்சநீதிமன்றத்தில் அதிமுகவுக்கு இரட்டை இலை சின்னம் கிடைக்கும். இதற்காக பொதுக்குழு தீர்மானங்களை உச்சநீதிமன்றத்தில் ஏற்கனவே சமர்ப்பித்து உள்ளோம். கடந்த ஐந்து நாட்களாக வாக்காளர் பட்டியல் சரி பார்க்கிறோம். அதில் இறந்த 5,000 வாக்காளர்கள் பெயர் உள்ளது. சுமார் 20 லிருந்து 25 ஆயிரம் வாக்காளர்கள் குடி பெயர்ந்துள்ளனர். எனவே அதை அதிகாரிகள் பூத் ஸ்லிப் வழங்கும்போது சரி செய்ய வேண்டும்.

அண்ணா திமுக தேர்தல் வெற்றி அடுத்த ஆண்டு நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில் எதிரொலிக்கும். அண்ணா திமுக அரசு ஒரு ஆண்டில் ரூ.766 கோடி திருமண உதவித்தொகை திட்டத்திற்கு ஒதுக்கியது. ஆனால் தற்போது ரூபாய் 200 கோடி மட்டுமே உயர் கல்வி பயிலும் மாணவிகளுக்கு ரூபாய் ஆயிரம் வழங்கும் திட்டத்தின் கீழ் திமுக அரசு ஒதுக்கி உள்ளது. இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின் போது, ஈரோடு மாநகர மாவட்ட செயலாளர் கே.வி.ராமலிங்கம், முன்னாள் அமைச்சர்கள் மாதவரம் மூர்த்தி, ராமச்சந்திரன், முன்னாள் எம்பி திருத்தணி ஹரி, முன்னாள் துணை மேயர் கே.சி.பழனிசாமி உள்பட பலர் உடன் இருந்தனர்

Tags:    

Similar News