திமுக ஆட்சியில் மக்கள் எதிர்பார்த்த எதுவும் நடக்கவில்லை: செங்கோட்டையன் குற்றச்சாட்டு
ஈரோடு கிழக்கு தொகுதியில் அதிமுக வெற்றி உறுதி செய்யப்பட்ட ஒன்று என்று முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.
ஈரோடு கிழக்கு தொகுதியில் அண்ணா திமுக வெற்றி உறுதி செய்யப்பட்ட ஒன்று என்று முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார். அவர் ஈரோடு பெரியார் நகரில் அண்ணா திமுக பூத் கமிட்டி ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றார். அப்போது செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: மக்களிடம் மன மாற்றம் ஏற்பட்டுள்ளது. அவர்கள் எதிர்பார்த்தது எதுவும் இந்த ஆட்சியில் நடக்கவில்லை. கடந்த அண்ணா திமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட தாலிக்கு தங்கம், ஸ்கூட்டி, லேப்டாப், இலவச மிக்சி கிரைண்டர், ஆடு, மாடு வழங்கியது உட்பட பல்வேறு திட்டங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. அண்ணா திமுக ஆட்சியில் அனைத்து துறைகளும் சிறப்பாக செயல்பட்டன. திமுக தேர்தல் அறிக்கையில் ரூ.ஆயிரம் மகளிர்க்கு வழங்கப்படும் என்பது உட்பட சொல்லப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. எனவே அண்ணா திமுக வெற்றி உறுதி செய்யப்பட்ட ஒன்று என்றார். பின்னர், செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் அளித்த அவர், "பொறுத்திருந்து பாருங்கள் சின்னம் எங்களுக்கு தான்" என்று கூறினார்.
போட்டியின் போது, முன்னாள் அமைச்சர்கள் பி.தங்கமணி, கே.சி.கருப்பண்ணன், ஈரோடு மாநகர மாவட்ட செயலாளர் கே.வி.ராமலிங்கம், எம்எல்ஏக்கள் ஜேகே (எ) ஜெயக்குமார், பண்ணாரி, முன்னாள் எம்பி செல்வகுமாரன் சின்னையன், முன்னாள் எம்எல்ஏக்கள் பாலகிருஷ்ணன், தென்னரசு, விடியல் சேகர், தமிழ் மாநில காங்கிரஸ் மாநில இளைஞரணி செயலாளர் யுவராஜா, ஈரோடு வேளாளர் கல்வி நிறுவனங்களின் தாளாளர் எஸ்.டி.சந்திரசேகர், ஈரோடு மத்திய மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் விஜயகுமார், பெரியார் நகர் பகுதி செயலாளர் மனோகரன், சூரம்பட்டி பகுதி செயலாளர் ஜெகதீஷ், மாவட்ட இணை செயலாளர்கள் ஜெயலட்சுமி மோகன், பாப்பாத்தி மணி, மாவட்ட வழக்கறிஞர் பிரிவு தலைவர் துரை சக்திவேல் மற்றும் ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த அண்ணா திமுக அனைத்து சார்பாகவும் கலந்து கொண்டனர்.