முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி குலதெய்வம் கோயிலில் வழிபாடு...
ஈரோடு அருகேயுள்ள தனது குலதெய்வம் கோயிலில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வழிபாடு நடத்தினார்.
ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினராக இருந்த திருமகன் ஈவெரா மறைவைத் தொடர்ந்து அந்த தொகுதிக்கு பிப்ரவரி 27 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதனால், தமிழக அரசியல் களம் சூடு பிடித்துள்ளது. அந்த தொகுதிக்கான இடைத்தேர்தல் பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். காங்கிரஸ் கட்சிக்கு மக்கள் நீதி மய்யம் ஆதரவு தெரிவித்துள்ளது.
இருப்பினும், பிரதான எதிர்க்கட்சியான அதிமுக சார்பில் இன்னும் வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை. இந்த நிலையில் முன்னாள் முதல்வரும், அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி ஈரோட்டில் முகாமிட்டு கட்சி மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். ஓரிரு நாட்களில் அவர் வேட்பாளரை அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஈரோடு வந்த முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பெருந்துறையில் இருந்து பவானி செல்லும் வழியில் நசியனூரில் உள்ள பிரசித்தி பெற்ற அப்பாத்தாள் கோயில் சென்றார். இந்த கோயில் தான் எடப்பாடி பழனிசாமியின் குலதெய்வ கோயில் ஆகும். நசியனூரில் உள்ள தனது குலதெய்வ கோயிலான அப்பாத்தாள் கோயிலுக்குச் சென்ற எடப்பாடி பழனிசாமி அங்கு பயபக்தியுடன் சுவாமி தரிசனம் செய்தார்.
அவருடன் முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், கருப்பணன், சட்டமன்ற உறுப்பினர்கள் ஜெயக்குமார், பண்ணாரி, முன்னாள் எம்எல்ஏ ராமலிங்கம் மற்றும் அதிமுகவினர் பலரும் வழிபாடு நடத்தினர். ஈரோட்டில் இருந்து நசியனூருக்கு காரில் சென்ற எடப்பாடி பழனிசாமிக்கு ஈரோடு, பவானி, பெருந்துறை தொகுதிகளைச் சேர்ந்த அதிமுகவினர் திரண்டு வரவேற்பு அளித்தனர்.