அந்தியூர் அருகே சென்னம்பட்டி வனப்பகுதியில் வனவிலங்குகளை வேட்டையாட முயன்ற 3 பேர் கைது!
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே சென்னம்பட்டி வனப்பகுதியில் வனவிலங்குகளை வேட்டையாட முயன்ற 3 பேரை வனத்துறையினர் கைது செய்தனர்.;
அந்தியூர் அருகே சென்னம்பட்டி வனப்பகுதியில் வனவிலங்குகளை வேட்டையாட முயன்ற 3 பேரை வனத்துறையினர் கைது செய்தனர்.
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த அம்மாபேட்டை அருகே உள்ள சென்னம்பட்டி வனச்சரகத்துக்கு உட்பட்ட முரளி மேற்கு பீட் வனப்பகுதியில் வனச்சரகர் ராஜா தலைமையிலான வனத்துறையினர் ரோந்து சென்றனர்.
அப்போது, அங்குள்ள மலையனூர் ஏரி சரகம் அருகே சென்றபோது வனத்துறையினரை கண்டதும் 3 பேர் அங்கிருந்து தப்பி ஓட முயன்றனர். உடனே அவர்களை வனத்துறையினர் சுற்றி வளைத்து பிடித்து விசாரித்தனர்.
விசாரணையில், அவர்கள் எண்ணமங்கலத்தை அடுத்த மலையனூரை சேர்ந்த மாதேஷ் (வயது 40) மற்றொரு மாதேஷ், (வயது 41), பர்கூர் கொங்காடையை சேர்ந்த வெள்ளியங்கிரி (வயது 37) என்பது தெரியவந்தது .
மேலும், இவர்கள் இறைச்சிக்காக வனவிலங்குகளை வேட்டையாட முயன்றதும், தெரியவந்தது. இதைத்தொடர்ந்து, 3 பேரையும் வனத்துறையினர் கைது செய்ததுடன், அவர்களிடம் இருந்த நாட்டு துப்பாக்கி, 5 தோட்டா, கத்தி, அரிவாள் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.
பின்னர், அவர்கள் 3 பேரையும் பவானி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோபி மாவட்ட சிறையில் அடைத்தனர்.