ஈரோட்டில் பாலித்தீன் பை பயன்படுத்திய இட்லி கடைகளுக்கு அபராதம்: உணவு பாதுகாப்பு அதிகாரிகள் நடவடிக்கை
ஈரோடு கருங்கல்பாளையத்தில் பாலித்தீன் பை பயன்படுத்திய இட்லி கடைகளுக்கு அபராதம் விதித்து உணவு பாதுகாப்பு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.;
ஈரோடு கருங்கல்பாளையத்தில் உள்ள இட்லி கடைகளில் மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் தங்கவிக்னேஷ் ஆய்வு மேற்கொண்ட போது எடுத்த படம்.
ஈரோடு கருங்கல்பாளையத்தில் பாலித்தீன் பை பயன்படுத்திய இட்லி கடைகளுக்கு அபராதம் விதித்து உணவு பாதுகாப்பு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.
ஈரோடு கருங்கல்பாளையத்தில் இட்லி கடைகள் அதிகமாக உள்ளன. இந்த கடைகள் தமிழக அளவில் பிரசித்தி பெற்றவை. தினசரி பல ஆயிரம் இட்லிகள் இங்கிருந்து ஈரோடு மட்டுமின்றி, பல்வேறு இடங்களுக்கும் கொண்டு செல்லப்படுகின்றன. விருந்து, விழாக்களுக்கும் ஆர்டர்களின் பேரில் இங்கிருந்து இட்லிகள் கொண்டு செல்லப்படுகிறது.
இந்தநிலையில், நேற்று ஈரோடு மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அதிகாரி டாக்டர் தங்கவிக்னேஷ் தலைமையில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் கேசவராஜ், செல்வன் ஆகியோர் கருங்கல்பாளையத்தில் உள்ள இட்லி கடைகளில் திடீர் சோதனை நடத்தினர்.
அப்போது, அவர்கள் ஒவ்வொரு கடையாக சென்று அங்கு இட்லி வேக வைக்கும் பாத்திரங்கள், இட்லி தட்டுகள், மாவு மற்றும் மாவு வைக்கும் பாத்திரங்கள், சுற்றுப்புற சுகாதாரம் ஆகியவை குறித்து சோதனை நடத்தினர்.
மேலும், இட்லி வாங்கும் பொதுமக்களுக்கு பாலித்தீன் பைகளில் (கேரி பேக்) இட்லி வழங்கப்படுகிறதா? எனவும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப்படுகிறதா? எனவும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
அப்போது, பாலித்தின் பைகள் பயன்படுத்தியதாக சில இட்லி கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. இதற்காக மொத்தம் ரூ.6 ஆயிரமும், வடை உள்ளிட்ட பலகாரங்களை அச்சடிக்கப்பட்ட காகிதத்தில் நேரடியாக வைத்து வினியோகம் செய்தது கண்டுபிடிக்கப்பட்டு ரூ.3 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது.
இதுகுறித்து உணவு பாதுகாப்பு நியமன அதிகாரி டாக்டர் தங்கவிக்னேஷ் கூறியதாவது, கர்நாடகா உள்பட வெளி மாநிலங்களில் இட்லி தயாரிக்கும்போது பிளாஸ்டிக் பொருட் கள் பயன்படுத்தப்படுவதாக செய்திகள் வெளிவந்து உள்ளன.
இதைத்தொடர்ந்து, தமிழ் நாட்டிலும் இதுபோன்ற சுகாதாரமற்ற நடவடிக்கைகள் உள்ளனவா? என்று சோதனை செய்ய தமிழக அரசு சுகாதாரத்துறை செயலாளர் மற்றும் உணவு பாதுகாப்பு ஆணையாளர் உத்தரவிட்டார்.
அதன்பேரில், ஈரோடு மாவட்ட கலெக்டர் அறிவுரையின் பேரில் இந்த ஆய்வு பணியை தொடங்கி உள்ளோம். ஈரோடு கருங்கல்பாளையம் பகுதியில் நடத்திய சோதனையில் இட்லி தயாரிப்பின் போது பிளாஸ்டிக் பொருட்கள் எதுவும் பயன்படுத்தப்படவில்லை.
ஆனால், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பாலித்தீன் பைகள் பயன்படுத்தப்படுகிறது. அதனை கண்டறிந்து அபராதம் விதித்துள்ளோம். விரைவில் இங்குள்ள இட்லி வியாபாரிகளுக்கு உணவு பாதுகாப்பு தொடர்பான ஒருநாள் பயிற்சி முகாம் நடைபெறும்.
இதுபோன்ற சோதனைகள் தொடரும். உணவுப்பொருட்கள் தொடர்பான புகார்களை பொதுமக்கள் 94440 42322 என்ற எண்ணில் தெரிவிக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.