நகர்புற உள்ளாட்சி தேர்தல்; பறக்கும் படை அதிகாரிகள் தீவிர வாகன சோதனை
நகர்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி ஈரோடு மாவட்டம் முழுவதும் 66 பேர் கொண்ட பறக்கும் படையினர் தீவிர சோதனையிட்டு வருகின்றனர்;
பவானி நகராட்சி பகுதிகளில் வாகன சோதனையில் ஈடுபட்ட பறக்கும் படை அதிகாரிகள்
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அடுத்த மாதம் (பிப்ரவரி) 19-ந்தேதி நடக்கிறது. இதையொட்டி தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல் படுத்தப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டத்தை பொறுத்தவரை ஒரு மாநகராட்சி, 4 நகராட்சிகள், 42 பேரூராட்சிகளில் மொத்தம் 573 வார்டுகள் உள்ளன.இதற்கான வேட்புமனு தாக்கல் நேற்று முன்தினம் தொடங்கி நடந்து வருகிறது.இந்த நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருட்கள் வழங்குவதை தடுக்கவும், உரிய ஆவணங்கள் இன்றி பணம் பரிசு பொருட்கள் கொண்டு செல்வதை தவிர்க்கவும் மாவட்டம் முழுவதும் 66 தேர்தல் பறக்கும் படை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.இவர்கள் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் மாவட்ட எல்லைப் பகுதிகள், முக்கிய சாலைகளில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக, பவானி லட்சுமி நகர் சோதனை சாவடி, நொய்யல் ஆறு சோதனை சாவடி, பண்ணாரி சோதனைச் சாவடி உள்பட இடங்களில் தேர்தல் பறக்கும் படையினர், பல்வேறு இடங்களில் தங்களது சோதனையை தீவிரப்படுத்தி வருகின்றனர். மாநகராட்சி மைய அலுவலக கூட்டரங்கில் மாநகராட்சி தேர்தல் கட்டுப்பாட்டு. மையம் திறக்கப்பட்டுள்ளது.இந்த மையம் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் செயல்படும். மையத்தின் கட்டணமில்லா தொலைபேசி எண் 180042594890 வாக்காளர்களுக்கு பணம் வழங்குவது உள்ளிட்ட தேர்தல் தொடர்பான் புகார்களை இந்த எண்ணில் தெரிவிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.