கோபி நகராட்சியில் வாக்குப்பதிவு இயந்திரத்தில் சின்னம் பொருத்தும் பணி தொடக்கம்
கோபிசெட்டிபாளையம் நகராட்சி தேர்தலையொட்டி, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் சின்னங்கள் பொருத்தும் பணி இன்று தொடங்கியது.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப் பதிவு வருகிற 19-ஆம் தேதி நடைபெறுகிறது. ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் நகராட்சியில் 30 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு தேர்தல் நடைபெறும் நிலையில், அந்த நகராட்சி அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் பிரேம் ஆனந்த் தலைமையில், நகராட்சி தேர்தல் பார்வையாளர் ஆனந்தராஜ் மற்றும் உமாபதி ஆகியோர் முன்னிலையில், 71 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர்களின் சின்னம் பொருத்தும் பணி நடைபெற்றது.
அப்போது, ஒவ்வொரு வார்டாக வேட்பாளர்களின் முகவர்கள் அழைக்கப்பட்டு அவர்களது முன்னிலையில் வாக்குச்சீட்டுகள் பொருத்தப்பட்டு, மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் 'சீல்' வைக்கப்பட்டன. வேட்பாளர்களின் பெயர், சின்னம் அடங்கிய வாக்குச்சீட்டுகள் பொருத்தப்பட்ட பிறகு அனைத்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களும் மீண்டும் அலுவலகத்தில் உள்ள ஸ்ட்ராங் ரூமில் வைக்கப்பட்டது.