73 சதவீதம் பேருக்கு முதல் தவணை தடுப்பூசி: அமைச்சர் முத்துசாமி
ஈரோடு மாவட்டத்தில் இதுவரை 73 சதவீதம் பேருக்கு முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் முத்துசாமி தெரிவித்தார்.
தமிழ்நாடு வீட்டுவசதித்துறை அமைச்சர் முத்துசாமி ஈரோட்டில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: நமது மாவட்டத்தில் இதுவரை 73 சதவீதம் பேர் முதல் தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டு உள்ளனர். 30 சதவீதம் பேர் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தியுள்ளனர். தற்போது மாபெரும் தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது. ஆரம்பத்தில் பல்வேறு சிக்கல்கள் இருந்தன. நமது மாவட்டத்தில் முதலில் பூத் வாரியாக தடுப்பு ஊசி செலுத்தப்பட்டது. பின்னர் வாக்காளர் பட்டியல் அடிப்படையில் தடுப்பூசி போடப்பட்டது. தற்போது வீடு வீடாகச் சென்று தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இதுவரை முதல் தவணை தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்கள் உடனடியாக செலுத்தி கொள்ளுங்கள். நமது மாவட்டத்தில் கொரோனா தாக்கம் குறைந்து வருகிறது. தேவைக்கு அதிகமாக படுக்கை வசதி உள்ளது. இதேபோல் மற்ற நோயாளிகளுக்கும் அவர்களுக்கு தேவையான சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.