ஈரோடு மாவட்டத்தில் 16.19 லட்சம் பேருக்கு முதல் தவணை கொரோனா தடுப்பூசி
ஈரோடு மாவட்டத்தில் 16 லட்சத்து 19 ஆயிரம் பேருக்கு முதல் தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது.
தமிழகமெங்கும் கொரோனா வைரஸ் தொற்றின் பரவல் எண்ணிக்கை இந்த மாத ஆரம்பத்திலிருந்தே அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க மத்திய, மாநில அரசுகளின் துரித நடவடிக்கைகளும், ஊரடங்கு உத்தரவுகளும் பிறப்பிக்கப்பட்டு வருகிறது. முககவசம் கட்டாயமாக்கப்படுதல் தடுப்பூசிகள் செலுத்துவதற்கான முக்கியத்துவத்தையும் அறிவுறுத்தி வருகிறது. தடுப்பூசி செலுத்துவதற்கான மெகா முகாம்களும் மாவட்டந்தோறும் நடைபெற்று வருகிறது. தற்போது வரை 20 கட்டங்களாக மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டத்தை பொறுத்தவரை 23 லட்சத்து 77 ஆயிரத்து 315 பேர் உள்ளனர். இதில் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் 18 லட்சத்து 9 ஆயிரத்து 100 பேர் உள்ளனர். கடநத ஜனவரி 31-ம் தேதி வரை மாவட்டத்தில் 16 லட்சத்து 19 ஆயிரத்து 638 பேருக்கு முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது. கொரோனா 2-வது தவணை தடுப்பூசி 12 லட்சத்து 24 ஆயிரத்து 043 பேர் செலுத்தி கொண்டு உள்ளனர். எனவே மொத்தம் 28 லட்சத்து 43 ஆயிரத்து 681 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.