பூஜ்ஜிய ஆற்றல் குளிரூட்டும் அறை: அந்தியூரில் விவசாயிகளிடம் கோவை வேளாண் கல்லூரி மாணவிகள் அசத்தல்!
பூஜ்ஜிய ஆற்றல் குளிரூட்டும் அறையை அமைப்பது குறித்து ஈரோடு மாவட்டம் அந்தியூர் விவசாயிகளுக்கு கோவை வேளாண் கல்லூரி இறுதி ஆண்டு மாணவிகள் செயல்முறை விளக்கம் அளித்தனர்.;
பூஜ்ஜிய ஆற்றல் குளிரூட்டும் அறையை அமைப்பது குறித்து அந்தியூர் விவசாயிகளுக்கு கோவை வேளாண் கல்லூரி இறுதி ஆண்டு மாணவிகள் செயல்முறை விளக்கம் அளித்தனர்.
கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண் கல்லூரியில் இறுதி ஆண்டு பயிலும் மாணவ, மாணவிகளுக்கான கிராமப்புற விவசாய பணி அனுபவ திட்டம் நடைபெற்று வருகிறது.
அதன் ஒரு பகுதியாக, ஈரோடு மாவட்டம் அந்தியூர் சுற்று வட்டாரத்தில் வேளாண் கல்லூரி மாணவிகள் பூஜ்ஜிய ஆற்றல் குளிரூட்டும் அறையை வடிவமைத்து அதன் பயன்பாட்டினை விவசாயிகளுக்கு எடுத்துரைக்கும் களப்பணியில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து அவர்கள் தெரிவித்ததாவது, இந்த பூஜ்ஜிய ஆற்றல் குளிரூட்டும் அறையானது எளிதில் கிடைக்க கூடிய செங்கல் மற்றும் மணலால் ஆன ஒரு சிறிய அறை ஆகும். அதில் விவசாயிகள் புதிதாக அறுவடை செய்யப்பட்ட விலை பொருட்களை சந்தைக்கு கொண்டு செல்வதற்கு முன்பு சேமித்து வைக்கலாம்.
இந்த அறை வெப்பநிலையை 10-15 °C ஆக குறைத்து ஈரப்பதத்தை அதிகமாக வைத்திருக்கும் தன்மை உடையது. இதனால் விளைபொருட்கள் நாள் முழுவதும் வெயிலில் வீணாகாது. இதற்கான தளம் சமமாக இருக்க வேண்டும். நிழல் மற்றும் நீர் ஆதாரத்திற்கு அருகில் இருக்க வேண்டும்.
செய்முறையில், பூஜ்ஜிய ஆற்றல் குளிர் அறையை உருவாக்க, இரட்டை சுவர் செங்கல் அமைப்பை உருவாக்கவும், சுவர்களுக்கு இடையில் 7.5 செ.மீ குழியை விடவும், குழியை ஈரமான மணலால் நிரப்பவும்,பழங்கள் மற்றும் காய்கறிகளை துளையிடபட்ட பிளாஸ்டிக் பெட்டிகளில் வைத்து அறைக்குள் வைக்க வேண்டும்.
மேற்புறத்தை சாக்கினால் (கோனிப்பை) மூடவும், அறை நிழலாடியதாகவும் நன்கு காற்றோட்டமாகவும் இருப்பதை உறுதி செய்யவும். மணல், செங்கற்கள் மற்றும் மேல் மூடியை தினமும் இருமுறை நீர் பாசனம் செய்ய வேண்டும்.
இது காய்கறிகளுக்கு குளிர்ந்த சூழலை அமைத்து கொடுப்பதுடன் அவற்றின் அடுக்கு வாழ்க்கை மற்றும் தரத்தை அதிகரிக்கிறது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.