பவானிசாகர் அணையில் இருந்து பாசனத்திற்காக நீர் திறப்பு நீட்டிப்பு
ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையில் இருந்து முதல்போக பாசனத்திற்காக தண்ணீர் திறந்துவிடப்படுவது அடுத்த மாதம் 15-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.;
ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அணையில் இருந்து, கீழ்பவானி திட்டப் பிரதானக் கால்வாய், இரட்டைப்படை மதகுகள் மற்றும் சென்னசமுத்திரம் பகிர்மானக் கால்வாய், ஒற்றைப்படை மதகுகளின் முதல்போக நன்செய் பாசனத்திற்கு 15.08.2021 முதல் 12.12.2021 வரை தண்ணீர் திறந்து விட ஏற்கெனவே ஆணையிடப்பட்டு, அதன்படி தண்ணீர் திறந்து விடப்பட்டது.
தற்போது, பவானிசாகர் அணையில் இருந்து முதல்போக பாசனத்திற்கு, 12.12.2021-க்கு பிறகு நீட்டிப்பு செய்து, தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று, கீழ்பவானி முறைநீர்ப்பாசன விவசாயிகள் கூட்டமைப்பினர் கோரினர். இதை ஏற்று, பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி திட்டப் பிரதானக் கால்வாய், இரட்டைப்படை மதகுகள் மற்றும் சென்னசமுத்திரம் பகிர்மானக் கால்வாய் ஒற்றைப்படை மதகுகளின் முதல்போக நன்செய் பாசனத்திற்கு 13.12.2021 முதல் 15.01.2022 முடிய மேலும் 34 நாட்களுக்கு கால நீட்டிப்பு செய்து தண்ணீர் திறந்து விட ஆணையிடப்படுகிறது.
இதனால் ஈரோடு, திருப்பூர், மற்றும் கரூர் மாவட்டங்களில் உள்ள 1,03,500 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என, அரசு கூடுதல் தலைமை செயலர் சந்தீப் சக்சேனா விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.