ராணுவ வீரர்கள் குறித்து அவதூறாக பேசிய முன்னாள் அமைச்சர் மீது நடவடிக்கை எடுக்க கோரி ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு!
ராணுவ வீரர்கள் குறித்து அவதூறாக பேசிய முன்னாள் அமைச்சர் மீது நடவடிக்கை எடுக்க கோரி, முன்னாள் படைவீரர் கூட்டமைப்பினர் ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளித்தனர்.;
ராணுவ வீரர்கள் குறித்து அவதூறாக பேசிய முன்னாள் அமைச்சர் மீது நடவடிக்கை எடுக்க கோரி, முன்னாள் படைவீரர் கூட்டமைப்பினர் ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளித்தனர்.
தமிழ்நாடு முன்னாள் படைவீரர் கூட்டமைப்பின் தலைவர் பழனியப்பன் தலைமையில் முன்னாள் படை வீரர்கள்,ராணுவ வீரர்கள் குறித்து அவதூறாக பேசிய முன்னாள் அமைச்சர் மீது நடவடிக்கை எடுக்க கோரி ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜாதாவிடம் நேற்று புகார் மனு அளித்தனர்.
பின்னர், அவர்கள் செய்தியாளர்களிடம் கூறியதாவது, பாகிஸ்தான் தாக்குதலுக்கு இந்திய ராணுவம் 'ஆபரேசன் சிந்தூர்' என்ற பெயரில் பதில் தாக்குதல் நடத்தியது. இதில், உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கும், கடந்த ஏப்ரல் மாதம் 22ம் தேதி தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த பொதுமக்களுக்கும் நாங்கள் அஞ்சலி செலுத்தினோம்.
ராணுவ வீரர்களின் தியா கத்தை போற்றும் வகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பேரணி நடந்தது. இதைத் தொடர்ந்து மதுரையில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில், அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, ராணுவ வீரர்கள் எல்லையில் ஒன்றும் செய்யவில்லை.
அந்த இடத்தில் ராணுவ வீரர்கள் தேவையில்லை. இன்றைய காலக்கட்டத்தில் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தான் போர் நடக்கிறது. அந்த தொழில்நுட்பத்தை தான் மத்திய அரசு வாங்கி கொடுத்துள்ளது. முக்கியமான அரசியல் செல்வாக்குமிக்கவர்கள் தான் இந்த போரை நடத்துகின்றனர் என தெரிவித்துள்ளார்.
போர் முனையில் இருக்கும் ராணுவ வீரர்கள் என்ன சூழ்நிலையில் இருப்பார்கள் என்று எங்களை போன்ற முன்னாள் வீரர்களுக்கு மட்டுமே தெரியும். முன்னாள் அமைச்சரின் பேச்சு நாடு முழுவதும் உள்ள அனைத்து ராணுவ வீரர்களுக்கும், முன்னாள் படை வீரர்களுக்கும் மிகுந்த மன அழுத்தத்தை கொடுத்துள்ளது.
எனவே, ராணுவ வீரர்கள் குறித்து அவதூறாக பேசிய அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.