மூதாட்டி கொலை வழக்கில் சிக்கிய இளைஞர்
மூதாட்டி கொலை வழக்கில் இளைஞர் ஒருவரை போலீசார் கைது செய்து அவரிடமிருந்து தங்கநகை,பணம், செல்போன் பறிமுதல் செய்து சிறைக்கு அனுப்பினர்.;
ஈரோடு மாணிக்கம் பாளையம் அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் தனியாக இருந்த 68 வயதான மணிமேகலை என்ற மூதாட்டியை நேற்று மாலை மர்ம நபர் ஒருவர் கழுத்தை அறுத்து கொலை செய்தார்.
மேலும் மூதாட்டி அணிந்திருந்த 4 பவுன் தங்க நகையை பறித்து சென்றார். இந்த கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்த வீரப்பன்சத்திரம் போலீசார் தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
அக்கம்பக்கத்தினரிடம் மேற்கொண்ட விசாரணையின் போது மூதாட்டி மணிமேகலைக்கு அடிக்கடி கார் ஓட்டுவதற்காக வரும் இளைஞர் சம்பவத்தன்று வந்து சென்றது தெரிய வந்தது.
இதனையடுத்து கருங்கல்பாளையம் அருகே இருந்த அந்த இளைஞரை மடக்கி பிடித்த போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அந்த இளைஞரின் பெயர் மகேந்திரன்(எ) மகேஸ்வரன்(எ) பிரபு என்பதும் மூதாட்டி மணிமகலை அணிந்திருந்த நகைக்காக கொலை செய்ததையும் ஒப்பு கொண்டார்.
இதனையடுத்து ஆதாய கொலையாக வழக்குப்பதிவு செய்து அவரிடமிருந்து தங்கநகைகள்,பணம் , செல்போன் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்த போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறைகாவலக்கு அனுப்பி வைத்தனர்.