ஈரோடு மாவட்டத்தில் கொரோனா நிவாரண நிதி டோக்கன் விநியோகம்
ரேஷனில் வழங்கப்படும் தமிழக அரசின் கொரோனா நிவாரணத்தொகைக்கான டோக்கன் விநியோகம், ஈரோட்டில் இன்று தொடங்கியது.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள, 1,152 ரேஷன் கடைகளில், 7 லட்சத்து, 13,910 ரேஷன் கார்டுகளுக்கு தலா, 2,000 ரூபாய் வழங்கப்பட உள்ளது. இம்மாத இறுதிக்குள் அனைத்து கார்டுதாரர்களுக்கும் சென்றடைய நடவடிக்கை மேற்கொள்ளப்படும், என வட்ட வழங்கல் அதிகாரி தெரிவித்தார்.
ஊரடங்கு காலத்திலும் ரேஷன் கடை காலை 8 மணி முதல் 12 மணி வரை செயல்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். தற்போது தொற்று அதிகமாக பரவி வருவதால் மக்கள் கூட்டம் கூடுவதை தவிர்க்கும் வகையில் டோக்கன் முறையில் நிவாரணத் தொகை வழங்க முடிவு செய்யப்பட்டது.
அதன்படி இன்றுமுதல் வரும் 12ஆம் தேதி வரை, குடும்ப அட்டைதாரர்களுக்கு ரேஷன் கடை பணியாளர்கள் வீடுகளுக்குச் சென்று டோக்கன் விநியோகிக்கும் பணியை தொடங்கியுள்ளனர். அதில் தொகை பெறுவதற்கான நாள் குறிப்பிடப்பட்டிருக்கும். டோக்கன் வினியோகிக்கும் பணி முடிந்தவுடன் வரும் 15ஆம் தேதி முதல் மாவட்டம் முழுவதும் அந்தந்த பகுதிக்குட்பட்ட ரேஷன் கடைகளில் ரூ. 2000 நிவாரணத் தொகை வழங்கப்படும்.
டோக்கனில் குறிப்பிட்டுள்ள அந்த நாட்களில் அந்த குறிப்பிட்ட பகுதியை சேர்ந்த மக்கள் வந்து நிவாரண தொகையை அரசு அறிவித்துள்ள பாதுகாப்பு வழிமுறைகளுடன் பெற்று செல்லலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.