உழவர் சந்தை 3 இடத்தில் பிரிந்து சமூக இடைவெளியுடன் இயங்கியது
ஈரோட்டில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, உழவர் சந்தையை மூன்றாக பிரித்து சமூக இடைவெளியுடன் அமைத்தனர்.;
ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தாக்கம் மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இந்த ஆண்டின் புதிய உச்சமாக இதுவரை இல்லாத அளவாக ஒரே நாளில் 119 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பரவலை தடுக்க மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி, சுகாதார துறையினர் ஒன்றிணைந்து தடுப்பு நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அதன்படி ஒரே இடத்தில் மக்கள் கூட்டம் கூடுவதை தவிர்க்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. ஈரோடு சம்பத் நகரில் உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. இங்கு வியாபாரிகள் தாங்கள் உற்பத்தி செய்த காய்கறிகளை நேரடியாக கொண்டு வந்து குறைந்த விலைக்கு விற்பனை செய்து வருகின்றனர். இதனால் உழவர் சந்தையில் எப்போதும் மக்களின் கூட்டம் அதிகமாக இருக்கும்.
தற்போது கொரோனா பரவலையொட்டி ஒரே இடத்தில் மக்கள் கூடுவதை தவிர்க்கும் வகையில் உழவர் சந்தை மூன்றாகப் பிரிக்கப்பட்டு பெரியார் நகர் உழவர் சந்தை, குமலன்குட்டை தொடக்கப்பள்ளி, சம்பத் நகர் உழவர் சந்தையில் செயல்படும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்திருந்தது. அதன்படி இன்று முதல் பெரியார் நகர் பகுதியிலும், குமலன்குட்டை தொடக்கப் பள்ளி வளாகத்திலும், சம்பத் நகர் உழவர் சந்தையிலும் செயல்படத் தொடங்கியது. குமலன்குட்டை தொடக்கப்பள்ளியில் 40 கடைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. அதில் இன்று 24 கடைகள் போடப்பட்டு இருந்தது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நுழைவாயில் காய்கறி வாங்க வந்த பொதுமக்கள் இருசக்கர வாகனங்களுக்கு கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. இதேபோல் பொது மக்கள் கையில் சானிடைசர் மூலம் சுத்தப்படுத்தபப்பட்டது.மேலும் உடல் வெப்ப நிலையை தெரிந்து கொள்ளும் வகையில் தெர்மல் ஸ்கேனர் மூலம் பரிசோதனை செய்யப்பட்டது. முக கவசம் அணியாமல் வந்த பொதுமக்கள் உழவர் சந்தைக்குள் அனுமதிக்கபடவில்லை. சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் கடைகள் அமைக்கப்பட்டிருந்தன.