ஈரோட்டில் 13 ஆசிரியர்களுக்கு மாநில நல்லாசிரியர் விருது:கலெக்டர் வழங்கல்
ஈரோடு மாவட்டத்தில் 13 பேருக்கு மாநில நல்லாசிரியர் விருதினை மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி வழங்கினார்.;
ஆசிரியராக இருந்து நாட்டின் குடியரசுத் தலைவராக உயர்ந்த சர்வபள்ளி ராதாகிருஷ்ணனைப் போற்றும் வகையில் அவரது பிறந்த நாளான செப்டம்பர் 5ஆம் தேதி ஆசிரியர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நாளை மேலும் சிறபிக்கும் வகையில் ஆசிரியர் பணியில் சிறந்து விளங்கும் ஆசிரியர்களுக்கு தமிழக அரசின் சார்பில் நல்லாசிரியர் வழங்கப்பட்டு வருகிறது. ஆண்டுதோறும் டாக்டர் ராதாகிருஷ்ணன் பெயரில் வழங்கப்படும் நல்லாசிரியர் விருதுக்காக ஈரோடு மாவட்டத்தில் இருந்து 17 ஆசிரியர்கள் விண்ணப்பித்து இருந்தனர். இதில் 13 ஆசிரியர்கள் தேர்வு குழு கமிட்டியால் தேர்வு செய்யப்பட்டு பட்டியல் வெளியிடப்பட்டது.
மேலும் கொரோனா பரவல் காரணமாக விருது வழங்கும் விழா அந்தந்த மாவட்டங்களிலேயே நடத்த அரசு உத்தரவிட்டது. அதன்படி ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் இன்று விருது வழங்கும் விழா நடைபெற்றது. இவ்விழாவில் மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி கலந்து கொண்டு நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட 13 ஆசிரியர்களுக்கும் விருதுகளை வழங்கி சிறப்பித்தார். கொரானா கட்டுப்பாடு காரணமாக விருது பெறும் ஆசிரியர் மற்றும் அவருடன் ஒரு நபர் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். இந்த விழாவின் மூலம் 9 அரசு பள்ளி ஆசிரியர்கள், ஒரு அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர், ஒரு தனியார் பள்ளி ஆசிரியர், மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன விரிவுரையாளர்கள் இருவர் என மொத்தம் 13 நபர்கள் மாநில நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டது.
இதையடுத்து விருதினைப் பெற்ற பட்டதாரி ஆசிரியர் மணிகண்டன் கூறுகையில், டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்களின் கோட்பாடுகளை முன் உதாரணமாக எடுத்துக் கொண்டு செயல்படுகிறேன். பள்ளிகளில் மாணவர்களுக்கு ராதாகிருஷ்ணின் வாழ்கையை போதித்தி வருகிறேன். மேலும் சுய கற்றல் முறையை கற்று கொடுக்கின்றேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.