யூனிவர்சல் டெக்ஸ்டைல் பிராசசிங் நிறுவனருக்கு சேவா ரத்னா விருது

ஈரோடு யூனிவர்சல் டெக்ஸ்டைல் பிராசசிங் நிறுவனரின் பொது சேவையை பாராட்டி சேவா ரத்னா விருது மற்றும் கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.;

Update: 2021-09-17 14:15 GMT

பாரதியார் சமூக கலாசார அகாடமி சார்பில் சேவா ரத்னா விருது பெறும் நந்தகோபால். 

ஈரோடு யூனிவர்சல் டெக்ஸ்டைல் பிராசசிங் நிறுவனர் கே.என். நந்தகோபால். இவர் கடந்த 10 ஆண்டுகளாக ஏழை, எளிய மக்களுக்கு பல்வேறு உதவிகளை செய்து வருகிறார். இதில், மக்கள் இ-சேவை மையம் மூலம் மாணவ-மாணவிகள் மத்திய, மாநில அரசுகளின் போட்டி தோ்வுகளுக்கு விண்ணப்பிப்பதற்கும், வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்வதற்கும் கட்டணம் ஏதுவும் வசூலிக்காமல் இலவசமாக செய்து வருகிறார்.

கூலி தொழில் செய்யும் மக்களுக்கு வருவாய் துறை சான்றுகள், இணையவழி சான்றுகள் உள்ளிட்டவற்றை பெற கட்டணமின்றி விண்ணப்பித்து சான்றிதழ் பெற்று தருகிறார். இதேபோல், கபடி, கிரிக்கெட் போன்ற விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும் விதமாக இலவசமாக விளையாட்டு உபகரணங்கள் வழங்கி, போட்டிகளையும் நடத்தி பரிசுகளையும் வழங்கி வருகிறார். மேலும், ஈரோட்டை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட ஏழை, எளிய மாணவ-மாணவிகள் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் கல்வி பயில உதவித்தொகையைஆண்டுதோறும் வழங்கி வருகிறார்.

இந்நிலையில், நந்தகோபாலின் மக்கள் சேவையை கவுரவிக்கும் வகையில், பாரதியார் சமூக கலாசார அகாடமி சார்பில் சேவா ரத்னா விருது வழங்கும் நிகழ்ச்சி ஈரோட்டில் நடைபெற்றது. நிகழ்ச்சியில், பாரதியார் சமூக கலாசார அகடாமியின் தலைவர் விநாயகம், நந்தகோபாலின் பொது சேவை மற்றும் சமூக சேவையை பாராட்டி சேவா ரத்னா விருது வழங்கினார். இதேபோல், கனடா நாட்டின் பிராம்டன் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் சாம்சன், நந்தகோபாலுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கி கவுரவித்தார்.

இந்நிகழ்ச்சியில், திரைப்பட இயக்குநர் ஆனந்த், பெரியகுளம் பொன்வாசு, மின்வாரிய அதிகாரி நந்தகுமார், அமுதலதா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். விருது மற்றும் டாக்டர் பட்டம் பெற்ற நந்தகோபால் ஈரோடு கங்காபுரம் டெக்ஸ்டைல் பிராசசிங் சங்க தலைவராகவும், ஈரோடு, நாமக்கல் மாவட்டங்களின் அனைத்து டெக்ஸ்டைல் பிராசசர் சங்கங்களின் இணை செயலாளராகவும், ஜிகர் பிளிச்சிங் ஓனர் சங்கத்தின் துணை தலைவராகவும், ஈரோடு குத்துசண்டை(பாக்சிங்) சங்கத்தின் துணை தலைவராகவும் பதவி வகித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News