ஈரோட்டில் விடிய விடிய மழை:சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து போக்குவரத்து பாதிப்பு
ஈரோடு சென்னிமலை சாலையில் விடிய விடிய பெய்த மழை காரணமாக சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
ஈரோடு மாநகர பகுதியில் நேற்று நள்ளிரவு முதல் சாரல் மழை பெய்தது. குறிப்பாக இன்று அதிகாலை 3:30 மணி முதல் காலை வரை பரவலாக மழை பெய்தது.
இந்நிலையில் ஈரோடு சென்னிமலை ரோட்டில் ரயில்வே பணிமனை அருகே உள்ள சுற்றுச்சுவரின் ஒரு பகுதி திடீரென இடிந்து சென்னிமலை ரோட்டில் விழுந்தது. அந்தச் சுற்று சுவரில் ஏற்கனவே கழிவு ஆயில் சூழ்ந்திருந்தது.
இடிந்த சுவற்றில் இருந்த கழிவு ஆயிலுடன் மழை நீரும் சேர்ந்தது. இதனால் ஈரோட்டிலிருந்து சென்னிமலை செல்லும் பிரதான சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
தகவலறிந்து அங்கு வந்த போலீசார் போக்குவரத்தை மாற்றி அமைத்து சீர் செய்தனர். இதனையடுத்து இடிந்து விழுந்த சுவரை அப்புறப்படுத்தும் பணியில் பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.