ஈரோட்டில் 50 ஆயிரம் விசைத்தறிகள் இன்று முதல் மீண்டும் இயக்கம்
ஈரோட்டில், 7 வாரங்களுக்கு பிறகு இன்று, 50 ஆயிரம் விசைத்தறிகள், 33 சதவீத பணியாளர்களுடன் செயல்பட தொடங்கின.;
ஈரோடு மாவட்டத்தில் வீரப்பன்சத்திரம், சித்தோடு, சோலார், அசோக்புரம், மொடக்குறிச்சி உள்பட, மாவட்டம் முழுவதும் 50 ஆயிரம் விசைத்தறிகள் செயல்பட்டு வருகிறது. விசைத்தறிகள் மூலம் நாளொன்றுக்கு 24 லட்சம் மீட்டர் ரயான் துணிகள் உற்பத்தி செய்யப்பட்டு மகாராஷ்டிரா, ராஜஸ்தான், குஜராத் போன்ற வெளி மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இதில் 30 ஆயிரம் தொழிலாளர்கள் ஈடுபட்டு வந்தனர். நாளொன்றுக்கு ரூ. 7 கோடி மதிப்பிலான வர்த்தகம் நடைபெற்று வந்தது.
வெளிமாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்ததன் காரணமாக ரூ 200 கோடி மதிப்பிலான துணிகள் குடோன்களில் தேங்கி உள்ளது. தமிழகத்திலும் கொரோனா தாக்கம் அதிகரித்து காணப்பட்டதால், பரவலை கட்டுப்படுத்தும் வகையில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால், ஈரோடு மாவட்டத்தில் விசைத்தறிகள் கடந்த 7 வாரங்களுக்கு முன்பு மூடப்பட்டன.
இதனால், விசைத்தறி தொழிலை நம்பி இருந்த 30 ஆயிரம் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது. தினமும் ரூ 7 கோடி மதிப்பிலான வர்த்தகம் முடங்கியது. தற்போது தமிழகத்தில் தொற்று பாதிப்பு குறைய தொடங்கி உள்ளதால் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வருகிறது.
அதன்படி, ஈரோட்டில் விசைத்தறிகள், 33 சதவீத ஊழியர்களுடன் மட்டும் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, இன்று முதல் ஈரோடு மாவட்டத்தில் 50 ஆயிரம் விசைத்தறிகள் கிட்டத்தட்ட 7 வாரங்களுக்கு பிறகு இயங்க தொடங்கியுள்ளன. மூன்றில் ஒரு பங்கு ஊழியர்களுடன் விசைத்தறிகள் துணி உற்பத்தியை மீண்டும் இயங்க தொடங்கியுள்ளதால, விசைத்தறியாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.