கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஈரோட்டில் அமைச்சர்கள் ஆய்வு
ஈரோட்டில் கொரோனா தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு, வீட்டுவசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி, செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் ஆகியோர் ஆய்வு நடத்தினர்.
ஈரோடு கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் கதிரவன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், தமிழக நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு, வீட்டுவசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி, செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
ஆய்வு கூட்டத்தின் போது, ஈரோடு மாவட்டத்தில் அதிகரித்து வரும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மேற்கொள்ளப்பட்டு வரும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும், கொரோனா நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்தும் கேட்டறிந்தனர்.
முன்னதாக, ஈரோடு வேளாளர் மகளிர் கல்லூரியில் மாநகராட்சி சார்பில் அமைக்கப்பட்ட கொரோனா சிகிச்சை மையத்தை ஆய்வு செய்த அமைச்சர்கள், கனி மார்க்கெட் பகுதியில் புதியதாக கட்டப்படும் கட்டிடப்பணிகளையும் பார்வையிட்டனர்.