அமைச்சர் முத்துசாமி ஈரோடு நீதிமன்றத்தில் நேரில் ஆஜர்
கடந்த அதிமுக ஆட்சியின்போது கொரோனா விதி மீறலில் ஈடுபட்டதாக தொடரப்பட்ட வழக்கில் அமைச்சர் முத்துசாமி இன்று ஈரோடு நீதிமன்றத்தில் ஆஜரானார்.
கடந்த தேர்தலின் போது "விடியலை நோக்கி ஸ்டாலின் குரல்" என்ற பிரச்சாரத்தை திமுக மேற்கொண்டது. அப்போது கடந்த ஆண்டு டிசம்பர் 1ம் தேதி அன்று திமுக மாநில மகளிர் அணி செயலாளரும், எம்பியுமான, கனிமொழி ஈரோடு மாவட்டத்தில் பரப்புரை மேற்கொண்டார். அப்போது கொரோனா விதிகளை மீறியதாக அப்போதைய அதிமுக அரசு, ஈரோடு தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், தமிழக வீட்டுவசதி துறை அமைச்சருமான முத்துசாமி மீது வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கின் விசாரணையானது இன்று ஈரோடு குற்றவியல் நடுவர் நீதிமன்றம் 1-இல் நடைபெற்றது. இதற்காக அமைச்சர் முத்துசாமி நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார். இவ்வழக்கை விசாரித்த நீதிபதி வடிவேல், அமைச்சரன முத்துசாமியை வரும் அக்டோபர் 12ஆம் தேதி மீண்டும் ஆஜராகுமாறு உத்தரவிட்டார். அமைச்சர் முத்துசாமி நீதிமன்றத்தில் ஆஜராகும் போது ஏராளமான வழக்கறிஞர்களும், பொதுமக்களும் திரண்டதால் நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.