ஈரோட்டில் 28ம் தேதி முதல் புதிய தளர்வுகள் - திறக்க ஆயத்தமாகும் கடைகள்
ஈரோட்டில், வரும் 28ம் தேதி முதல் கூடுதல் தளர்வுகளுடன் ஒரு வாரத்திற்கு நீட்டிப்பு செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால், திறப்பதற்கு கடைகள் ஆயத்தமாகி வருகின்றன.;
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு அவை பல்வேறு கட்டங்களாக தளர்வுகளுடன் நீட்டிக்கப்பட்டு வருகிறது. எனினும் ஈரோடு,சேலம், கோவை உள்பட 11 மாவட்டங்களில் பாதிப்பு மற்ற மாவட்டங்களை காட்டிலும் அதிகமாக இருந்து வருகிறது. இதனால் ஊரடங்கு நீட்டிக்கும் போது அதிக பாதிப்புள்ள 11 மாவட்டங்களில் சில தளர்வுகள் மட்டும் அளிக்கப்பட்டு வருகிறது.
அவ்வகையில், வரும் 28-ஆம் தேதி முதல் ஜூலை 5ஆம் தேதி வரை, ஊரடங்கு மீண்டும் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஈரோடு மாவட்டத்தில் ஏற்கெனவே உள்ள தளர்வுகளுடன் சேர்த்து டீக்கடைகள் காலை 6 மணி முதல் மாலை 7 மணிவரை பார்சலில் மட்டும் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
மென்பொருட்கள் ,பல்புகள், கேபிள்கள், சுவிட்சுகள் மற்றும் ஒயர்கள் விற்பனை செய்யும் கடைகள் காலை 9 மணி முதல் மாலை 7 மணி வரையும், ஹார்டுவேர் கடைகள் காலை 9 மணி முதல் மாலை 7 மணி வரையும், கல்வி புத்தகங்கள் மற்றும் எழுது பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் காலை 9 மணி முதல் மாலை 7 மணி வரையும், காலணிகள் விற்பனை செய்யும் கடைகள் காலை 9 மணி முதல் மாலை 7 மணி வரையும், அழகு நிலையங்கள், சலூன் கடைகள் குளிர்சாதன வசதி இல்லாமல் ஒரு நேரத்தில் 50 சதவீத வாடிக்கையாளர்களுடன் மட்டும் காலை 6 மணி முதல் மாலை 7 மணிவரை இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
பூங்காக்கள் காலை 6 மணி முதல் 9 மணி வரை செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இனிப்பு கார வகை கடைகள் பார்சலில் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. சேவை மையங்கள் வழக்கம்போல் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
அதே நேர்இதேப் போல் பொது போக்குவரத்துக்கும் தடை நீடிக்கிறது. ஈரோடு மாவட்டத்தில் இருந்து மற்ற மாவட்டங்களுக்கு செல்ல மீண்டும் இ-பாஸ் முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. இதேபோல் பிற மாவட்டத்தை சேர்ந்தவர்கள் ஈரோடு மாவட்டத்திற்கு வருவதற்கும் இ பாஸ் முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. டீக்கடைகள், எழுதுபொருள் கடைகள், பேன்சி ஸ்டோர் உள்ளிட்டவற்றுக்கு அனுமதி தரப்பட்டுள்ளதால், திறப்பதற்கு கடையை அதன் உரிமையாளர்கள் ஆயத்தப்படுத்தி வருகின்றனர்.