3 நாட்கள் விடுமுறைக்குப் பிறகு ஈரோட்டில் ஒரே நாளில் ரூ. 6 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை ஆனது.
தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு கடந்த 4ஆம் தேதி முதல் முதல் 6-ந் தேதி வரை மூன்று நாட்களுக்கு டாஸ்மாக் மதுக்கடைகள் அனைத்துக்கும் விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது. மூன்று நாட்கள் விடுமுறைக்கு பிறகு நேற்று வழக்கம் போல் டாஸ்மாக் மதுக்கடை திறக்கப்பட்டது. மூன்று நாள்கள் கழித்து திறக்கப்பட்டதால் காலையில் மதுக்கடைகளில் மது பிரியர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. மதிய நேரம் வெயில் அதிகமாக இருந்ததால் வெறிச்சோடி காணப்பட்டது.
தொடர்ந்து மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை வழக்கத்தைவிட அதிகமாக கூட்டம் இருந்தது. மதுப் பிரியர்கள் அடிக்கும் வெயில் சூட்டை தணிக்க பீர் வகைகளை அதிக அளவு விரும்பி வாங்கினர். நேற்று ஒரு நாள் மட்டும் மாவட்டம் முழுவதும் ரூ 5 கோடியே 99 லட்சத்து 48 ஆயிரத்து 950 ரூபாய்க்கு மது விற்பனையானதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.