மருத்துவர்கள் மீதான தாக்குதலை கண்டித்து 18ம் தேதி தேசிய எதிர்ப்பு தினம்: ஐ.எம்.ஏ. அறிவிப்பு
மருத்துவர்கள், செவிலியர்கள் மீதான தாக்குதல் நடத்துவதை கண்டித்தும், உரிய பாதுகாப்பு வழங்கக்கோரி வரும் 18 ம் தேதி தேசிய எதிர்ப்பு தினம் கடைபிடிக்கப்படும் என்று, ஐ.எம்.ஏ தேசிய துணைத்தலைவர் சி.என்.ராஜா தெரிவித்துள்ளார்.;
இந்திய மருத்துவ சங்கத்தினரின் செய்தியாளர்கள் சந்திப்பு நிகழ்ச்சி ஈரோட்டில் நடைபெற்றது. அப்போது, இந்திய மருத்துவர் சங்க தேசிய துணை தலைவர் டாக்டர் சி.என்.ராஜா, செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கொரானா இரண்டாம் அலை மிகப்பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. அடுத்து மூன்றாம் அலை மிகமோசமாக இருக்கும் என நிபுணர்கள் கூறுகின்றனர். இத்தகைய ஆபத்தான சூழலிலும் டாக்டர்கள், செவிலியர்கள், பிற மருத்துவ பணியாளர்கள் மக்கள் பணி செய்து வருகின்றனர். ஆனால் டாக்டர்கள், செவிலியர்கள், மருத்துவமனைகளை அஸாம், உத்தரப்பிரதேசம், கர்நாடகா என பல மாநிலங்களில் தாக்குதல் நடத்துகின்றனர்.
கொரானா காலத்தில் இதுபோன்ற தாக்குதல் மிக அதிகமாக உள்ளது. இதனால், இளம் டாக்டர்கள் சேவைப்பணி செய்ய அச்சம் அடைகின்றனர். இந்தியாவில் 18 மாநிலங்களில் மருத்துவமனை பாதுகாப்பு சட்டம் நடைமுறையில் உள்ளது. இதனை இந்தியா அளவில் முழுமையாக அமல்படுத்தி, தாக்குதலில் ஈடுபடுவோரை கடுமையாக தண்டிக்க வேண்டும். மருத்துவர்கள், மருத்துவமனை தவறு செய்தால் அதனை மருத்துவத்துறையிலும், மாவட்ட கலெக்டரிடமும், வேறு பல அமைப்புகளிடமும் புகார் செய்து சட்டப்பூர்வமாக நடவடிக்கை எடுக்கலாம். அதை விடுத்து தாக்குதல் நடத்துவது ஆபத்தாக உள்ளது.
இதுபோன்ற சம்பவங்களை கண்டித்து வரும் 18 ம் தேதி தேசிய எதிர்ப்பு தினமாக, காப்போரை காப்போம் என்ற முழக்கத்துடன் டாக்டர்கள் எதிர்ப்பை வெளிக்காட்டுகிறோம். அனைத்து டாக்டர்களும் கருப்பு பேட்ஜ் அணிந்தும், அரசுக்கு மனுக்கள் வழங்கியும் எதிர்ப்பை தெரிவிக்கிறோம் என்றார்.
இந்த சந்திப்பின் போது, டாக்டர்கள் சுதாகர், அபுல்ஹசன், சுகுமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.