ஈரோடு மாவட்டத்தில் அரசு பணியாளர்கள் தபால் வாக்கு அளித்தனர்.
ஈரோடு மாவட்டத்தில் 2ம் கட்ட தேர்தல் பயிற்சி முகாம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டவர்கள் பயிற்சி மையத்தில் வைக்கப்பட்டிருந்து வாக்கு பெட்டியில் தபால் ஓட்டுகளை போட்டனர்.
ஈரோடு மாவட்டத்தில் ஓட்டுப்பதிவில் ஈடுபடும் 13,160 பணியாளர்களுக்கும் இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்பு நடைபெற்றது. ஈரோடு தனியார் கல்லூரியில் நடந்த பயிற்சி வகுப்பில், வாக்காளர்கள் விபரங்களை சரி பார்த்தல், ஆவணங்களை அனுமதித்தல், மை வைத்தல், ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் இயக்க அனுமதித்தல், மூன்று இயந்திரங்களில் பழுது ஏற்பட்டால், அதனை சரி செய்தல் குறித்து பயிற்சி வழங்கப்பட்டது.
ஓட்டுப்பதிவு துவங்கியது முதல், ஒவ்வொரு மணி நேரத்துக்கும் ஒரு முறை எஸ்.எம்.எஸ்., மூலம் ஓட்டுப்பதிவு, அங்குள்ள நிலவரம் குறித்த தகவலை உரிய அதிகாரிக்கு அனுப்ப வேண்டிய முறைகளை விளக்கினர். இயந்திரங்களில் பழுது ஏற்பட்டாலும், பிற பிரச்னைகளையும் தெரிவிக்கும் முறை, அதற்கான அதிகாரிகள் விபரம் போன்றவை தெரிவிக்கப்பட்டது.
இதை தொடர்ந்து, அனைத்து பணியாளர்களுக்கும் தபால் ஓட்டுக்கான கவர் வழங்கப்பட்டது. அங்கேயே அவர்கள் ஓட்டுப்பதிவு செய்யும் வசதி ஏற்படுத்தி, ஓட்டுக்களை சேகரிக்கும் பெட்டி வைத்திருந்தனர்.
பயிற்சியின் நிறைவில், வரிசையாக சென்று, தங்களது ஓட்டுக்களை பெட்டியில் போட்டு சென்றனர். ஓட்டுப்போட விரும்பாதவர்கள், தங்களது ஓட்டுக்களை பெற்றுச் சென்றனர்.
இதுபற்றி, அதிகாரிகள் கூறுகையில், ''இவ்வாறு பெற்று செல்லப்பட்ட ஓட்டுக்களை, ஏப்., 5ல் நடக்கும் மூன்றாம் கட்ட பயிற்சியின் போது வைக்கப்படும் ஓட்டுப்பெட்டியில் பதிவான ஓட்டை போடலாம். அல்லது தபால் மூலமும் அனுப்பலாம்,'' என்றனர்.