முக கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கும் பணி தீவிரம்
ஈரோடு மாவட்டம் முழுவதும் இன்று முதல் முக கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கும் பணி தீவிரம்.
தற்போது கேரளா மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் மீண்டும் கொரோனா தாக்கம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. தமிழ்நாட்டிலும் கடந்த மார்ச் மாதம் 1-ஆம் தேதி முதல் மீண்டும் தினசரி பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலும் முக கவசம் அணியும் பழக்கம் முற்றிலும் குறைந்து உள்ளது. இதனால் கலெக்டர் கதிரவன் இன்று முதல் மாவட்டம் முழுவதும் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வரும்போது கண்டிப்பாக முக கவசம் அணிந்து வர உத்தரவிட்டார். இதை மீறி முக கவசம் அணியாமல் வருபவர்களுக்கு ரூ. 200 அபராதம் விதிக்கப்படும் என்றும் எச்சரித்தார்.
அதனடிப்படையில் இன்று ஈரோடு மாவட்டம் முழுவதும் மாநகராட்சி துப்புரவு ஆய்வாளர்கள், போலீசார், வருவாய்த் துறையினர், சுகாதாரத் துறையினர் ஒன்றிணைந்து பல்வேறு இடங்களில் சோதனை நடத்தி முக கவசம் அணியாமல் வந்தவர்களுக்கு ரூ .200 அபராதம் விதித்து வருகின்றனர்.