ஈரோடு சம்பத் நகர் உழவர் சந்தை மீண்டும் இடமாற்றம்
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த ஈரோடு சம்பத் நகர் உழவர் சந்தை வரும் ஜிடிஎஸ் பள்ளி வளாகத்திற்கு மாற்றப்படுகிறது.
தமிழ்நாடு அரசின் உத்தரவின்படி ஈரோடு மாவட்டத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக பொதுமக்கள் அதிகம் கூடுவதை தவிர்க்கும் பொருட்டு மாவட்டத்தில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் கலெக்டர் கதிரவன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ஈரோடு சம்பத் நகர் பகுதியில் இயங்கி வரும் உழவர் சந்தையானது ஏற்கெனவே மூன்றாக பிரிக்கப்பட்டு குமலன்குட்டை, மாநகராட்சி பெரியார்நகர், சம்பத்நகர் உழவர் சந்தை என மூன்று இடங்களில் இயங்கி வந்தது. எனினும் உழவர் சந்தைகளில் கூட்ட நெரிசல் அதிகமாக காணப்பட்டது.
இதனை கட்டுபடுத்தும் விதமாக சம்பத் நகர் உழவர் சந்தை ஒரே இடமாக பன்னீர் செல்வம் பார்க்கில் உள்ள அரசு மகளிர் மேல்நிலை பள்ளி (ஜி.டி.எஸ்) வளாகத்தில் வரும் வெள்ளிகிழமை முதல் செயல்படும். குமலன்குட்டை மற்றும் பெரியார்நகரில் மறு அறிவிப்பு வரும் வரையில் இயங்காது. எனவே பொதுமக்கள் தங்களது காய்கறி தேவைகளுக்கு ஜிடிஎஸ் பள்ளி வளாகத்தில் இயங்கும் உழவர்சந்தையை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
உழவர் சந்தை வளாகத்திற்குள் சமூக இடைவெளியை கடைபிடித்தும், முகக்கவசம் அணிந்தும், கிருமிநாசினியை பயன்படுத்த வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.