கருவில்பாறை வலசு குளத்தில் படகு சவாரி வசதி : திமுக முத்துசாமி
கருவில்பாறை வலசு குளத்தில் படகு சவாரி வசதி செய்து கொடுப்பதாக தி.மு.க., வேட்பாளர் முத்துசாமி வாக்குறுதி அளித்தார். ;
ஈரோடு மேற்கு தொகுதி தி.மு.க., வேட்பாளர் சு.முத்துசாமி, தென்றல் நகர், குறிஞ்சி நகர், எஸ்.எஸ்.பி., நகர், எம்.எம்.நகர், ஈகிள் கார்டன், மகாகவி பாரதியார் நகர், பெரியசேமூர், ராசாம்பாளையம் பகுதியில் ஓட்டு சேகரித்தார்.
அங்கு பொதுமக்களிடம் வேட்பாளர் சு.முத்துசாமி பேசியதாவது: ஈரோடு மாநகர பகுதியில் அடிப்படை வசதிகளை கடந்த பத்து ஆண்டுகளில் அ.தி.மு.க., அரசு செய்யவில்லை. கருவில்பாறை வலசு குளத்தை பல கோடி ரூபாயில் புனரமைத்து, அங்கு படகு சவாரி துவங்கப்படும் என அ.தி.மு.க. அரசு அறிவித்து, இதுவரை செயல்படுத்தவில்லை. தி.மு.க., ஆட்சி அமைந்ததும், முறையாக துார்வாரி, படகு சவாரி இயக்கப்படும்.
பெரியசேமூர், எல்லப்பாளையம் போன்ற பகுதிக்கு அரசு பஸ்,மினிபஸ் சேவை அதிகரிக்கப்படும். மேற்கு தொகுதி உட்பட தமிழகம் முழுவதும், பொதுப்பிரச்னை, கோரிக்கைகள், புகார் என அனைத்தும் தி.மு.க., ஆட்சிக்கு வந்த, 100நாளில் தனி குழு அமைத்து, தீர்வு காணப்படும். பெண்கள் பஸ்களில் இலவசமாக பயணிக்கலாம். முதியோர் உதவித்தொகை, 1,500 ரூபாயாக உயர்த்தப்படும். தகுதியான பயனாளிகளுக்கு உதவித்தொகை, ஓய்வூதியம் பெற்றுத்தரப்படும். விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தவும், பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு, ஐந்து ரூபாய் குறைக்கப்படும். இவற்றை நிறைவேற்ற என்னை வெற்றி பெற செய்யுங்கள்.என்று கூறினார்