கொரோனா அச்சம்: கண்காணிப்பு பணிகள் தீவிரம்
வெளிமாநிலங்களிலிருந்து ஈரோடு மாவட்டத்திற்கு வருபவர்கள் குறித்து தீவிர கண்காணிப்பு பணியில் சுகாதாரத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தினசரி பாதிப்பு குறைந்து வந்த நிலையில் தற்போது மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. மாவட்டத்தில் ஏற்கனவே பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. கேரளா மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களிலிருந்து வருபவர்கள் கண்டிப்பாக இ -பாஸ் பெற்று வரவேண்டும் என்றும், அவர்கள் தங்களுக்கு கொரோனா இல்லை என்ற சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு வருபவர்களை சுகாதாரத் துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
இதுகுறித்து ஈரோடு மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குனர் சவுண்ட் அம்மாள் கூறியதாவது:-
ஈரோடு மாவட்டத்தில் கொரோனா தாக்கம் பரவி விடக்கூடாது என்பதற்காக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக இங்கிருந்து கோவை, சேலம் செல்லும் தொழிலாளர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. அதைப்போல் அங்கிருந்து ஈரோடுக்கு வருபவர்களுக்கும் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. தற்போது நாள் ஒன்றுக்கு 2000 கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றாதவர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. வெளிமாநிலங்களில் இருந்து ஈரோட்டுக்கு யார் வந்தாலும் அவர்களை அந்தந்த பகுதி சுகாதார துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். அவர்களுக்கு கொரோனா இல்லை என்றாலும் அவர்கள் தங்களை வீடுகளில் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். தற்போது திருவிழா, திருமணம் மற்றும் துக்க நிகழ்ச்சி, போன்றவற்றில் பங்கேற்கும் மக்கள் முக கவசம் அணிவது இல்லை. அதே போன்று சமூக இடைவெளியையும் பின்பற்றுவதில்லை. இதனால் கொரோனா தாக்கம் அதிகரிக்கக்கூடிய சூழ்நிலை ஏற்படும். எனவே பொதுமக்கள் கண்டிப்பாக இது போன்ற விசேஷ நிகழ்ச்சிகளில் முக கவசம் அணிந்து, சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.